தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் தொழிற்சாலை உற்பத்தி வீழ்ச்சி

2 mins read
f6e81ea4-ef53-4e26-a2dc-90876ed2763a
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் உற்பத்தி நடவடிக்கை, பொருளியல் மந்தநிலையை அடையும் நிலைக்குச் சுருங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தம் நாட்டில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு உலக நாடுகள்மீது கடந்த ஏப்ரல் மாதம் வரி விதித்தார். அதனால் பல பொருள்களுக்கான ஏற்றுமதிகள் ஒத்திவைக்கப்பட்டன, ரத்து செய்யப்பட்டன. அது, உள்நாட்டு உற்பத்தியை பாதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

உற்பத்தித் துறையின் நிலையைக் கணிக்க உதவும் ‘வாங்கும் சக்திக் குறியீடு’ (பிஎம்ஐ) கடந்த ஏப்ரல் மாதம் 49.6 புள்ளிகளுக்குக் குறைந்தது. மார்ச்சில் பதிவான 50.6ஐக் காட்டிலும் ஏப்ரலுக்கான குறியீடு ஒரு புள்ளி குறைவு.

இக்குறியீடு, 50க்கு மேல் பதிவாகும்போது வளர்ச்சியைக் குறிக்கும், 50க்குக்கீழ் பதிவாகும்போது சுருக்கத்தைக் குறிக்கும்.

தொடர்ந்து 19 மாதங்களாக வளர்ந்துவந்த சிங்கப்பூரின் ஆலை நடவடிக்கை ஏப்ரலில் சுருங்கியதாக வாங்கும் நடவடிக்கை, சிங்கப்பூர் வாங்கும் சக்தி, பொருள் நிர்வாகக் கழகம் (எஸ்ஐபிஎம்எம்) தெரிவித்தது. அவ்விரங்களைக் கொண்ட அறிக்கையை அந்தக் கழகம் வெள்ளிக்கிழமை (மே 2) வெளியிட்டது.

இதற்கு முன்பு கடைசியாக 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிஎம்ஐ குறியீடு 50க்குக்கீழ் பதிவாகியிருந்தது. அப்போது குறியீடு 49.9ஆகப் பதிவானதென எஸ்ஐபிஎம்எம் புள்ளி விவரங்களில் தெரியவந்தது.

அமெரிக்க வரி விதிப்பு, உள்ளூர் உற்பத்தித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டதாக எஸ்ஐபிஎம்எம் நிர்வாக இயக்குநர் ஸ்டீஃபன் போ தெரிவித்தார்.

சிங்கப்பூரின் உற்பத்தித் துறையில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு பங்கு வகிக்கும் மின்சாரப் பொருள் துறையில் பிஎம்ஐ குறியீடு ஒரு புள்ளி குறைந்து 49.8ஆகப் பதிவானது. தொடர்ந்து 17 மாதங்களாக வளர்ச்சி கண்ட அத்துறையில் இப்போது வளர்ச்சி குறைந்துள்ளது.

2020ஆம் ஆண்டு தொட்க்கத்தில் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கிய காலகட்டத்துக்குப் பிறகு உற்பத்தி நடவடிக்கை இவ்வளவு அதிகமாகக் குறைந்திருப்பது இதுவே முதல்முறை என்றார் டிபிஎஸ் வங்கியின் மூத்த பொருளியல் வல்லுநர் சுவா ஹான் டெங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்