தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதிர்பார்ப்புகளை விஞ்சிய தொழிற்சாலை உற்பத்தி: 21% வளர்ச்சி

2 mins read
123ba39d-09a9-420b-b1f2-a9f0a1313ccb
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் உற்பத்தி, தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஆகஸ்ட் மாதம் வளர்ச்சியடைந்தது.

மின்சாரப் பொருள் உற்பத்தியில் வலுவான வளர்ச்சி இடம்பெற்றது அதற்கு முக்கிய காரணம்.

ஆண்டு அடிப்படையில் ஆகஸ்ட்டில் மொத்த உற்பத்தி 21 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. கடந்த ஜூலை மாதம் இரண்டு விழுக்காடு வளர்ச்சி பதிவானது, ஜூனில் 4.2 விழுக்காடு சுருங்கியது.

ஆகஸ்ட் மாதம் வளர்ச்சி விகிதம் 8.6 விழுக்காடாகப் பதிவாகும் என்று புளூம்பர்க் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பொருளியல் வல்லுநர்கள் முன்னதாகக் கணித்திருந்தனர்.

அதிக மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய உயிரியல் துறையைக் கருத்தில்கொள்ளாதபோது உற்பத்தி 27.7 விழுக்காடு அதிகரித்தது. பொருளியல் வளர்ச்சிக் கழகம் வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 26) வெளியிட்ட புள்ளி விவரங்களில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

பருவத்துக்கு ஏற்ப பல்வேறு அம்சங்கள் கருத்தில்கொள்ளப்பட்ட பிறகு மாத அடிப்படையில் உற்பத்தி 6.7 விழுக்காடு கூடியது. உயிரியல் உற்பத்தித் துறை அல்லாத துறைகளில் வளர்ச்சி விகிதம் 11 விழுக்காடாகப் பதிவானது.

சிங்கப்பூரின் உற்பத்தியில் கிட்டத்தட்டப் பாதி பங்கு வகிக்கும் மின்சாரப் பொருள் துறையில் ஆண்டு அடிப்படையில் உற்பத்தி 49.1 விழுக்காடு மாபெரும் வளர்ச்சியடைந்தது. கடந்த ஜூலை மாதம் அந்த வளர்ச்சி விகிதம் 2.9 விழுக்காடாகப் பதிவானது.

மின்சாரப் பொருள் துறையில், பகுதி மின்கடத்தி உற்பத்தி 54.6 விழுக்காடு அதிகரித்தது. இதர மின்சாரப் பொருள்கள் மற்றும் பாகங்களின் உற்பத்தி 21.5 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.

கணினிப் பொருள்கள், தரவுச் சேகரிப்புக் கருவிகள் ஆகியவற்றுக்கான உற்பத்தி 18.4 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. தகவல் தொடர்பு மற்றும் பயனீட்டாளர் மின்சாரப் பொருள்கள் உற்பத்தி 28.6 விழுக்காடு அதிகரித்தது.

ஆகஸ்ட் மாதம் உயிரியல் உற்பத்தியில்தான் ஆக மோசமான முடிவுகள் பதிவாயின. அத்துறையில் ஆண்டு அடிப்படையில் உற்பத்தி 16.1 விழுக்காடு சுருங்கியது. உயிரியல் துறையில் மருந்துப் பிரிவில் உற்பத்தி 15.7 விழுக்காடு சுருங்கியது.

போக்குவரத்துப் பொறியியல் துறையில் உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 3.9 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.

குறிப்புச் சொற்கள்