தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஏற்றம் கண்டுவந்த சிங்கப்பூரின் உற்பத்தித் துறை, ஆண்டு அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் 0.1 விழுக்காடு சரிவுகண்டது.
முன்னதாக, புளூம்பெர்க் நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் பங்கேற்ற பகுப்பாய்வாளர்கள் பிப்ரவரியில் உற்பத்தித் துறை 14.1 விழுக்காடு வளர்ச்சி காணும் என முன்னுரைத்திருந்தனர்.
பிப்ரவரி மாதம் சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டிருந்ததே இந்தச் சரிவிற்குக் காரணம் என்பது பொருளியல் வளர்ச்சிக் கழகம் புதன்கிழமை (மார்ச் 25) வெளியிட்ட தரவுகள்மூலம் தெரியவந்தது.
2026 ஜனவரி மாதத்திற்கான உற்பத்தித் துறையின் வளர்ச்சியையும் 16.6 விழுக்காட்டிலிருந்து 12.9 விழுக்காடு எனக் கழகம் திருத்தியமைத்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மின்னணுவியல் துறை மட்டுமே ஆண்டு அடிப்படையில் வளர்ச்சி கண்டது. அதன் வளர்ச்சி 13.7 விழுக்காடாகப் பதிவானது.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு சார்ந்த தேவையால் பகுதி மின்கடத்தி உற்பத்தி 14.6 விழுக்காடு ஏற்றம் கண்டது. அதுபோல, தகவல் தொடர்பு மற்றும் பயனீட்டாளர் மின்னணுவியல் பிரிவும் 21.9 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. ஆயினும், கணினி பாகங்கள் மற்றும் தரவுச் சேமிப்புப் பிரிவு 16.3 விழுக்காடு சுருங்கியது.
உயிர்மருத்துவத் துறை உற்பத்தியே ஆகப் பெருஞ்சரிவைச் சந்தித்தது. ஆண்டு அடிப்படையில், அது 27.3 விழுக்காடு இறக்கம் கண்டது. மருந்து உற்பத்தி 18 விழுக்காடும் மருத்துவக் கருவிகள் உற்பத்தி 30.4 விழுக்காடும் வீழ்ச்சி கண்டன.
துல்லியப் பொறியியல் தொழில்துறை 3.5 விழுக்காடும் வேதித் தொழில்துறை 4.6 விழுக்காடும் சரிவைச் சந்தித்தன.
தொடர்புடைய செய்திகள்
போக்குவரத்துப் பொறியியல் துறையில்தான் சரிவு மிகக் குறைவாக இருந்தது. 2025 பிப்ரவரி மாதத்தை ஒப்புநோக்க, அத்துறை 0.2 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.
பொது உற்பத்தித் துறையும் 5.7 விழுக்காடு சரிவை எதிர்கொண்டது. அதுபோல, அச்சுத் தொழில்துறையும் 1.3 விழுக்காடு சுருங்கியது.

