சிங்கப்பூரின் உற்பத்தித் திறன் கடந்த ஆகஸ்ட் மாதம் குறைந்தது.
தொடர்ந்து 13 மாதங்களாக அதிகரித்த உற்பத்தித் திறன் ஆகஸ்ட்டில் குறைந்தது. மருந்து, மின்சாரப் பொருள் உற்பத்தி சுருங்கியதைத் தொடர்ந்து உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டது.
ஆண்டு அடிப்படையில் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் 7.8 விழுக்காடு சரிந்தது. முன்னதாக ஜூலை மாதம் உற்பத்தித் திறன் 7.7 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.
சிங்கப்பூரின் உற்பத்தித் திறன் 1.9 விழுக்காடு குறையும் என்று புளூம்பர்க் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் பொருளியல் வல்லுநர்கள் கணித்திருந்தனர். இறுதியில் பதிவான விகிதம் அதைவிட மிகவும் குறைவாக உள்ளது.
பெரிய அளவில் அதிக மாற்றங்கள் இடம்பெறக்கூடிய உயிரியல் மருத்துவ உற்பத்தித் துறையைக் கருத்தில்கொள்ளாதபோது உற்பத்தின் திறன் 2.9 விழுக்காடு குறைந்தது.
காலகட்டத்துக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட அம்சங்களைக் கருத்தில்கொள்ளும்போது உற்பத்தித் திறன் மாத அடிப்படையில் 9.7 விழுக்காடு குறைந்தது. உயிரியல் மருத்துவ உற்பத்தியைக் கருத்தில்கொள்ளாதபோது அவ்விகிதம் 3.5 விழுக்காடாக இருக்கும்.
உயிரியல் மருத்துவ உற்பத்தித் துறைதான் ஆக மோசமாக பாதிக்கப்பட்டது. அத்துறை 37.3 விழுக்காடு சரிவை எதிர்கொண்டது. இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் உயிரியல் மருத்துவ உற்பத்தித் துறையில் ஆண்டு அடிப்படையில் உற்பத்தித் திறன் 3.4 விழுக்காடு குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதேவேளை, மருத்துவத் தொழில்நுட்பத் துறை ஆண்டு அடிப்படையில் ஆண்டு 5.3 விழுக்காடு வளர்ச்சி பதிவானது. மருத்துவச் சாதன ஏற்றுமதிக்கான தேவை தொடர்ந்து நீடிப்பதே அதற்குக் காரணம்.
ஜூலையில் பெரிய அளவில் வளர்ச்சி கண்ட மின்சாரப் பொருள் உற்பத்தி 4.8 விழுக்காடு குறைந்தது.
பகுதி மின்கடத்தி உற்பத்தி 8.8 விழுக்காடு விழுந்தது. கணினி பாகங்கள் உற்பத்தி 13.1 விழுக்காடு குறைவையும் தரவு சேகரிப்பு உற்பத்தி 16.8 விழுக்காடு சரிவையும் சந்தித்தன.
உணவு, பான, புகையிலை உற்பத்தி 15.9 விழுக்காடு சரிந்தது, பான, பால், ரொட்டி வகை உற்பத்தி குறைந்தது அதற்குக் காரணம்.