சிங்கப்பூரின் வெளிநாட்டுக் கொள்கை, பொருளியல், தலைமைத்துவம், குறித்து செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நூற்றுக்கணக்கான போலிக் காணொளிகள் தயாரிக்கப்பட்டு, யூடியூப்பில் சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ளன.
பிரதமர் லாரன்ஸ் வோங்கும் பொய்யான அக்காணொளிகளில் குறிவைக்கப்பட்டுள்ளார். பல மாதங்களாக செயல்பட்டுவரும் இந்த நடவடிக்கையில் பல யூடியூப் கணக்குகள் சம்பந்தப்பட்டுள்ளன.
மேலும் ஒரு மையப்புள்ளியில் இருந்து அக்காணொளிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக சிஎன்ஏ ஊடகம் நடத்திய விசாரணை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், முன்னாள் பிரதமர் லீ சியன் லூங்கினால் பதவியிலிருந்து நீக்கப்படப்போவதாக சில காணொளிகள் வெளிவந்துள்ளன. பிரதமர் வோங்கைக் குறிவைத்து 10 காணொளிகளில் ஏழு காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அவரது தலைமை குறித்தும் அரசியல் உள்பூசல்கள் பற்றியும் பற்பல வதந்திகள் அக்காணொளிகளில் பரப்பப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தொடங்கி, மில்லியன் கணக்கில் அக்காணொளிகள் பார்வையிடப்பட்டுள்ளன.
சிங்கப்பூருக்கு எதிராக அண்மைய காலங்களில் வெளியிடப்பட்டுள்ள இவ்வகையான காணொளிகள் பகிரப்படுவதற்கு மின்னிலக்கமயமும் ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
ஏறத்தாழ 30 யூடியூப் ஒளிபரப்புத் தடங்கள் இவைபோன்ற 300 காணொளிகளை வெளியிட்டுள்ளன.
அவற்றில் உலகத் தலைவர்கள் குறிவைக்கப்பட்டு, அவர்கள் பேசுவதுபோல மாண்டரின் மொழியில் குரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன அல்லது பாரம்பரிய சீன மொழிகளில் மொழிப்பெயர்ப்புகள் பதிவிடப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
யூடியூப்பில் ஒன்றைத் தேடும்போது, எதிர்பாராமல் இதுபோன்ற காணொளிகள் பார்வையாளர்களை வந்தடையும்படியாக தொழில்நுட்ப முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அது எஸ்இஓ (search engine optimisation) என்று அழைக்கப்படுகிறது.
ஒருசில காணொளிகள் சம்பந்தப்பட்ட ஒலிபரப்புத் தடங்களில் இருந்து நீக்கப்பட்டாலும் உடனே புதிய போலிக் காணொளிகள் அவற்றுக்குப் பதிலாக வெளியிடப்படுகின்றன.
பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையப் போவதாக சிங்கப்பூரையும் பிரதமரையும் எதிர்த்து காணொளிகள் வெளியிடப்படுவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

