நேப்பாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கித் தங்களது அன்பிற்குரியவர்களைப் பற்றிய தகவல் எதுவும் தெரியாமல் சிங்கப்பூரில் உள்ள இரு குடும்பங்கள் தவிப்புடன் காத்திருக்கின்றன.
‘கைலாஷ்-மானசரோவர் யாத்ரா 2026’ என்ற 14 நாள் ஆன்மிகப் பயணத்திற்காகச் சென்ற சிங்கப்பூரர்களான திருமதி ஷாலினி தேவி, 40, திரு எஸ். மணியம், 66, என இருவரைத் தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
“அம்மா எங்கே?” என்று கேட்கும் ஏழு வயது மகளிடம் உண்மை நிலையைச் சொல்ல முடியாமல் கலங்குகிறார் ஷாலினியின் கணவர் செல்வகணேஷ், 43.
“அம்மாவைக் காணவில்லை என்று மட்டுமே மகளிடம் கூறினேன். ‘அம்மாவிடம் மாலையில் பேச வேண்டும், போன் செய்யச் சொல்லுங்கள்’ எனக் கூறிவிட்டுப் பள்ளிக்குச் சென்றாள். நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்,” என்று தமிழ் முரசிடம் கூறிய அவர், தம் மனைவியுடன் பேசி ஏறத்தாழ 36 மணி நேரம் ஆகிவிட்டதாகச் சொன்னார்.
வயதான தாயாரின் வேதனை
மற்றொரு புறம், மாயமான திரு மணியத்தின் குடும்பத்தினரும் மிகுந்த கவலையில் உள்ளனர். அது குறித்து பேசிய திரு மணியத்தின் இளைய சகோதரர் திரு சங்கர், உடன்பிறந்த ஐவரில் மணியம்தான் மூத்தவர் என்றார்.
அவர்களின் இளைய சகோதரர் காலமாகிவிட்ட பெருந்துயரத்திலிருந்து இன்னும் மீளாத 85 வயது தாயாருக்கு, மூத்த மகன் மணியத்தைத் தொடர்புகொள்ள இயலாத செய்தி இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார் அவர்.
‘‘அண்ணன் இத்தகைய பயணம் மேற்கொள்வது இது முதன்முறையன்று. இந்தப் பயணத்திற்காகவும் கடந்த நான்கு வாரங்களாகப் பல பயிற்சிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டார். தோ பாயோவில் உள்ள எங்கள் இல்லத்தில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்,” என்றார் அவர்.
இரு குடும்பத்தினரும் வெளியுறவு அமைச்சைத் தொடர்புகொண்டு அதிகாரபூர்வ தகவல்களுக்காகக் காத்திருக்கின்றனர்.
நேப்பாளத்தில் மலேசியா, இந்தியா உட்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை (ஆகஸ்ட் 26) ஏற்பட்ட பேரிடரில் 350க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர்.


