ஈரான் போரால் சிங்கப்பூர்ப் பண்ணைகள் பாதிக்கப்படலாம்

ஈரான் போரால் சிங்கப்பூர்ப் பண்ணைகள் பாதிக்கப்படலாம்

2 mins read
9a04a083-3bb8-49e4-b3b9-48231d2b77a6
சிங்கப்பூரில் உள்ள அதிநவீனப் பண்ணைகள் எரிசக்தி விலை அதிகரிப்பால் பாதிக்கப்படலாம். - படம்: சாவ்பாவ்

அனைத்துலக அளவில் அதிகரித்துள்ள எரிசக்தி விலைகளால் சிங்கப்பூரின் வேளாண் உணவுத் துறை பாதிக்கப்படக்கூடும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள உட்புறப் பண்ணைகள் அதிகரிக்கக்கூடும் செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிப்பதற்குத் தயாராகிவருவதாகக் கூறின.

மத்திய கிழக்கில் தொடரும் பூசலால் மின்சாரக் கட்டணங்களும் உரங்களின் விலையும் உயரலாம் என்று பண்ணை நிர்வாகிகள் அஞ்சுகின்றனர்.

இருப்பினும், டுமேட்டோ டவுன் போன்ற சில பண்ணைகள் காய்கறிகளை வளர்க்க இயற்கை ஒளியைச் சார்ந்திருப்பதால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்தாலும் பாதிப்புகள் அதிகமாக இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு என்று கூறினர்.

எனவே, உற்பத்தியின் விலைகளை இப்போதைக்கு அவை உயர்த்தப்போவதில்லை என்றன.

செலவுகளைக் குறைப்பதற்கான வழிகள் குறித்தும் பண்ணைகள் ஆராய்வதால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று அவை நம்பிக்கைக் கொண்டுள்ளன. மத்திய கிழக்கிலிருந்து ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான உணவுப் பொருள்களையே சிங்கப்பூர் இறக்குமதி செய்வதாக ஆக அண்மையில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.

அப்படியிருந்தும் ஈரானில் நீடிக்கும் போராலும் ஹோர்முஸ் நீரிணை தடையாலும் சிங்கப்பூரின் உணவு விலைகள் அதிகரிக்கலாம் என்று அவர் கூறினார்.

இம்மாதம் 6ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் 138 நிலம் சார்ந்த பண்ணைகளும் 67 கடல் சார்ந்த பண்ணைகளும் இருந்தன. சிங்கப்பூர் நிலத்தில் கிட்டத்தட்ட ஒரு விழுக்காடு வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள செங்குத்துப் பண்ணைகளும் ஈரான் போரால் பாதிப்புகளைச் சந்திக்கக்கூடும் என்று அஞ்சுகின்றன.

இதற்குமுன் 2022ஆம் ஆண்டில், உக்ரேன்மீது ர‌ஷ்யா படையெடுத்தபோது ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியால் சிங்கப்பூரில் உள்ள பல பண்ணைகள் நிரந்தரமாக மூடப்பட்டன.

தற்போதைய நிலைமையைச் சமாளிக்க உள்ளூர்ப் பண்ணைகள் எரிசக்தியை மிச்சப்படுத்த உதவும் கருவிகளை வாங்கிப் பொருத்தலாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு அறிவுறுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்