சிங்கப்பூர், உலகச்சூழல் மாறிவரும் நிலையில் அதற்கேற்பப் பொருளியல் உத்திகளை வகுக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
நாடு தொடர்ந்து வளர்ச்சி காணவும் சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அவ்வாறு செய்ய வேண்டும் என்றார் அவர்.
மூன்று நாளாக நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தை வியாழக்கிழமை (பிப்ரவரி 26) நிறைவுசெய்து பேசிய திரு வோங், நிச்சயமற்ற உலகில் சிங்கப்பூரின் நிதி நிலைமை சாதகமாய் இருக்கிறது என்றார். நாட்டின் பொருளியலிலும் மக்களிடத்திலும் முதலீடு செய்வதற்கான ஆற்றலை அது வழங்குகிறது என்று அவர் கூறினார்.
நாட்டின் வலுவான, படிப்படியான வரிவிதிப்பு முறையும் செலவிடும் தன்மையும் கடந்தகால நெருக்கடிகளைச் சமாளிக்க உதவியது. அத்துடன் நாட்டின் நீண்டகால மீள்திறனைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் தொடர்ந்து வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்பக் கட்டுப்பாட்டுடன் செயல்படும்.
உலகின் நெருக்குதல்களை சிங்கப்பூர் நன்கு உணர்ந்துள்ளது. சென்ற ஆண்டு (2025) அமெரிக்கா, விடுதலை நாள் எனக் கூறி, தீர்வைகளை அறிவித்த பிறகு உலகில் அதிகாரமும் வலிமையுமே விளைவுகளை நிர்ணயிக்கின்றன.
மாறிய உலகில், சிங்கப்பூர் அதன் தொடர்புகளைப் பன்முகப்படுத்தி நம்பிக்கையான உறவுகளை வலுப்படுத்தும். மற்றவர்களால் எளிதில் நகலெடுக்க முடியாத தனித்துவமான மதிப்பை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
நவீன உற்பத்தி, நிதி, மின்னிலக்கச் சேவை, புதிய வளர்ச்சித் துறைகளை அவர் குறிப்பிட்டுச் சொன்னார்.
அதே நேரம் வளர்ச்சிக்கும் வேலைகளுக்குமான தொடர்பு கடந்தகாலத்துடன் ஒப்பிடுகையில் மேலும் சிக்கலாகியுள்ளது. அப்போது பொருளியல் விரிவாக்கம் என்றால் பொதுவாக வேலைவாய்ப்புகள் அதிகரிப்பது வழக்கம்.
தொடர்புடைய செய்திகள்
உலக அளவில் முன்னணி நிறுவனங்கள், தானியக்க வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகப் பிரதமர் சொன்னார்.
கடந்த பத்தாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியில் உற்பத்தித் துறையின் பங்கு ஏறக்குறைய 20 விழுக்காடு. ஆயினும் அந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் 14 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காட்டுக்குக் குறைந்தன.
அனைத்துத் துறைகளிலும் வேலைகளை ஏற்படுத்தித் தர வளர்ச்சி மட்டும் போதாது. அதனால்தான் சிங்கப்பூர் உள்நாட்டுப் பொருளியலை மேம்படுத்துவது முக்கியம் என்று அவர் சொன்னார்.
“நெருக்குதல்கள் அதிகரிக்கும்போது நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். உலகில் உள்ள புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றத் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். உலகம் நிச்சயமற்றதாக இருக்கக்கூடும். ஆனால் அதற்கு நாம் தயாராக இருக்கிறோம்,” என்றார் பிரதமர் வோங்.

