கடற்கொள்ளையர்கள் ஏறியதாக நம்பப்படும் சக்சஸ் 9 எனப்படும் சிங்கப்பூரில் பதிவான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கப்பல் சனிக்கிழமை (ஏப்ரல் 15) மாலை கண்பிடிக்கப்பட்டதாகவும் அதில் இருந்த ஒரு சிங்கப்பூரர் உட்பட 20 சிப்பந்திகளும் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஐவரி கோஸ்ட்டின் அபஜான் நகர் (Abidjan) கரை அருகே கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.
சக்சஸ் 9 கப்பல், ஏப்ரல்10ஆம் தேதி ஐவரி கோஸ்ட் அருகே சென்றுகொண்டிருந்த போது கடற்கொள்ளையர்களால் தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் கப்பலில் இருந்து எந்த தொடர்பும் கிடைக்கவில்லை.
அதையடுத்துக் கப்பலைத் தேடும் பணிகளில் பலநாட்டு அமைப்புகள் ஈடுபட்டன. சனிக்கிழமை மாலை சக்சஸ் 9 கப்பலை ஒரு வணிகக் கப்பல் சமிக்ஞையைக் கொண்டு கண்டுபிடித்தது.
அதன் பின்னர் அதிகாரிகள் அக்கப்பலை தொடர்பு கொண்டனர். தற்போது அந்த கப்பல் பாதுகாப்பாக அபஜான் துறைமுகத்தில் உள்ளதாக ஆணையம் தெரிவித்தது.

