கெய்ரோ: காஸா போரால் அவதியுற்ற பிள்ளைகள் தங்கள் கல்வியைத் தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூர் அனுப்பிய ஆக அண்மைய நிதி மூலம் நடமாடும் கல்விக் கூடத்தை அங்குள்ள அதிகாரிகளால் வாங்க முடியும்.
சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் $1.2 மில்லியன் மதிப்புள்ள நிவாரண உதவியை எகிப்தின் செம்பிறைச் சங்கத்துக்கு வழங்கியுள்ளது. அவற்றுள் $440,000 மதிப்புள்ள கூடாரங்களும் அத்தியாவசிய மருத்துவ, கல்விச் சேவைகளைப் பெற வகைசெய்யும் $758,000 மதிப்புள்ள நிதியும் அடங்கும்.
சிங்கப்பூர் வழங்கிய நிதி மருந்து மாத்திரைகள் வாங்கப் பயன்படுத்தப்படும். அதன் மூலம் போரால் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட 4,000 பேரும் அவர்களுடன் இருப்போரும் பயனடைவர்.
எகிப்தியச் செஞ்சிலுவைச் சங்கம் நிர்வகிக்கும் 11 தங்குமிடங்களில் உள்ள கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீனப் பிள்ளைகளுக்கான நடமாடும் கல்விக் கூடத்தையும் அமைக்க நிதி பயன்படுத்தப்படும்.
இத்துடன் சிங்கப்பூர் 10வது முறையாக மனிதநேய உதவிகளைக் காஸாவில் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. சிங்கப்பூர் மொத்தம் $23.3 மில்லியன் தொகையை வழங்கியுள்ளது.
கெய்ரோவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம் எகிப்தில் உள்ள செம்பிறைச் சங்கத் தலைமையகத்துக்குச் சென்று சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் நிவாரண நிதி வழங்கிய நடவடிக்கையைப் பார்வையிட்டார்.