பிரிட்டனில் பணியாற்றுவதற்காக அனுப்பப்பட்ட சிங்கப்பூர் அரசாங்க அதிகாரி ஒருவர், இரவில் தமது பிள்ளைகளை வீட்டில் தனியே விட்டுச் சென்றதன் தொடர்பாக அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
பிள்ளைகள் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் அதிகாரி தம்முடைய மனைவியை அழைத்து வர வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
லண்டலில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட அரசாங்க அதிகாரி, குழந்தையைக் கவனிக்கத் தவறிய சம்பவம் குறித்து தாங்கள் அறிந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் வெளியுறவு அமைச்சு கூறியது.
சம்பவம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்தபோது அதிகாரியின் ஒரு பிள்ளை தூக்கம் கலைந்து பூட்டிய வீட்டை விட்டு வெளியேறி ஆடவரையும் அவரின் துணைவியையும் தேடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
வீட்டிலிருந்து சற்று தூரத்தில் பிள்ளை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எவ்வித நடவடிக்கையும் தேவையில்லை என்ற நிலையில் அதிகாரிகள் விசாரணையை முடித்துக்கொண்டதாக அமைச்சு தெரிவித்தது.
விசாரணையில் அதிகாரி தமது முழு ஒத்துழைப்பை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் திட்டமிட்டபடி அந்த அதிகாரியின் லண்டன் பணிக்காலமும் முடிவடைந்துவிட்டதாக அறியப்படுகிறது.

