உலக நிலவரத்தில் நிச்சயமற்ற தன்மை, கடுமையான போட்டித்தன்மை, பொருளியல் எதார்த்த நிலை ஆகியவை நிலவியபோதும் சிங்கப்பூரர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து நல்ல வேலைகளையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தரும் என்று உறுதிகூறப்பட்டுள்ளது.
அதேசமயம், தொழில்துறை உருமாற்றத்தில் தொடர்ந்து முனைப்பாக செயல்படுவதுடன் செலவினம் தொடர்பான போட்டித்தன்மை பிரச்சினை மீதும் ஒரு கண் வைத்திருக்கும் என்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28ஆம் தேதி) நாடாளுமன்றத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
வரவுசெலவுத் திட்ட 2025 தொடர்பான மன்ற உறுப்பினர்கள் பங்குபெற்ற விவாதத்தை நிறைவுசெய்து பேசிய நிதியமைச்சருமான பிரதமர் லாரன்ஸ் வோங், உலக கட்டமைப்பு முழுமையாக மாறிவரும் நிலையிலும் சிங்கப்பூர் உலகமயச் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
உலக நாடுகள் தற்காப்பு, பாதுகாப்பு நலன்களில் கவனம் செலுத்துகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். இதில் அனைவரும் பயனடையும் வகையில் ஒன்றுக்கு ஒன்று விட்டுக்கொடுத்து செயல்படுவோம் என்று எண்ணாமல் தங்களுக்கு எதிராக போட்டி என்ற நிலையே இருக்கக்கூடாது என்ற நோக்கில் செயல்படுகின்றன. இந்தப் போக்கு சிங்கப்பூர் போன்ற சிறிய பொருளியல் மையங்களை பாதிக்கும் என்று அவர் கூறினார்.
போர் வேண்டாம் என்று நினைக்கும் வல்லரசுகள் அதற்கே தயாராகி வருகின்றன. மேலும், 20 ஆண்டுகளுக்கு முன் உற்பத்தியில் உலக அளவில் 9 விழுக்காடு பங்கு வகித்த சீனா, தற்பொழுது மொத்த உலக உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
“அதனால், அமெரிக்காவும் ஐரோப்பாவும் உற்பத்தியை மீண்டும் முடுக்கிவிடுவதில் பெருமுயற்சியில் இறங்கியுள்ளன. ஆகையால், முதலீடுகளைப் பெறுவதில் போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. எனவே, கடும் போட்டிக்கு நாம் தயாராக இருக்க வேண்டியதுடன் இதில் நீடித்திருக்க தேவையான அனைத்தையும் செய்ய வேண்டியுள்ளது,” என்று திரு வோங் தெளிவுபடுத்தினார்.
சிங்கப்பூர் போட்டித்தன்மையுடன் விளங்க, முதலீடுகளை ஈர்க்க, உற்பத்தித்திறன் நிதியில் பணம் நிரப்பப்படும்.
இது அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நல்ல வேலைகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தரும் என்று பிரதமர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வரவுசெலவுத் திட்ட விவாதத்தை நிறைவுசெய்து பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், நிச்சயமற்றநிலை அதிகரித்து வரும் உலகில், சிங்கப்பூரை மீள்திறன் மிக்கதாவும் வெற்றிகரமாகவும் வைத்திருக்கும் அரசாங்கத்தின் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தியுள்ளார் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டம் 2025, வாழ்க்கைச் செலவினப் பிரச்சினையைக் கையாண்டு, ஊழியர்களுக்கும் வணிகங்களுக்கும் ஆதரவளித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பொருளியலை வளர்த்து, பரிவுமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை வளர்க்கிறது என்றார் அவர்.
வரவுசெலவுத் திட்டத்தில் உபரி இருந்தபோதிலும் பொருள், சேவை வரி ஏன் அதிகரிக்கப்பட்டது, இதனால் பணவீக்கம் மோசமடைந்ததா என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டனர். பொருள், சேவை வரி அதிகரிப்பு தவிர்த்து, உலகளாவிய காரணங்களால் விலைகள் உயர்ந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக பணவீக்கம் குறைந்துள்ளது, ஆனால் விலைகள் குறையவில்லை, அதனால்தான் பல சிங்கப்பூரர்கள் கலங்குகிறார்கள். இதைப் புரிந்துகொண்டு, அரசாங்கம் சிடிசி பற்றுச்சீட்டுகள், எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் போன்ற திட்டங்களை உருவாக்கியுள்ளது. அவை செலவு அழுத்தங்களைத் தணிக்கின்றன என்றார் அவர்.
சிங்கப்பூர் இயற்கை வளங்களைக் கொண்டிருக்கவில்லை. நாட்டின் நிதி வலிமை முக்கியமான போட்டித்தன்மைமிக்க அனுகூலம். எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கணிக்க முடியாது. ஆனால் நாம் தயாராக வேண்டும். தொடர்ந்து விவேகத்துடன் செலவழிக்க வேண்டும். சிங்கப்பூரர்களின் வாழ்க்கையுடனும் எதிர்காலத்துடனும் ஒருபோதும் பணயம் வைக்கும் விதமாகச் செயல்படக்கூடாது என்று திரு லீ எச்சரித்தார்.
இது நமது எஸ்ஜி60 ஆண்டு. முன்னோடிகளின் கவனமான பணியினால் நமது வலுவான அடித்தளம் கட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் முன்னேற்றத்தை எதிர்காலத் தலைமுறையினர் அனுபவிக்க, நீடித்து நிலைக்கக்கூடிய வகையில் முன்னோக்கி நகர்வதற்கான நம்பிக்கையை இது அளிக்கிறது என்றார் அவர்.