அமெரிக்காவில் ஏற்கெனவே முதலீடு செய்யத் திட்டமுள்ள மருந்து நிறுவனங்கள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் புதிய வரி விதிப்பிலிருந்து விலக்கப்படுவதற்கான சாத்தியம் குறித்து ஆராயப்படுவதாகத் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங் சனிக்கிழமை (செப்டம்பர் 27) கூறியுள்ளார்.
முத்திரையிடப்பட்ட அல்லது காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள்கள்மீது அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) அறிவித்தார்.
அதை முன்னிட்டு செய்தியாளர்களிடம் திரு கான் பேசினார்.
அமெரிக்காவில் ஆலைகளைக் கட்டத் திட்டமிடும் மருந்து நிறுவனங்கள் மட்டும் புதிய வரி விதிப்பிலிருந்து விலக்குப் பெறும் என்று திரு டிரம்ப் கூறியிருப்பதால் ஏற்றுமதிகள் உடனடியாகப் பாதிக்கப்படாது என்றார் அவர்.
திரு டிரம்ப்பின் அறிவிப்பை அடுத்து உள்ளூரில் உள்ள மருந்து நிறுவனங்களைச் சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்புகொண்டதாகக் கூறிய திரு கான், அவற்றில் பெருன்பான்மை அமெரிக்காவில் முதலீடு செய்யவும் புதிய ஆலைகளை அங்கு அமைக்கவும் திட்டமிட்டிருப்பதை உறுதிப்படுத்தியதாகச் சொன்னார்.
எனினும், ஒட்டுமொத்த முதலீட்டுச் சூழலில் ஏற்படக்கூடிய நீண்டகாலத் தாக்கம் குறித்து அரசாங்கம் கவலையுற்றிருப்பதாக சிங்கப்பூர்ப் பொருளியல் மீள்திறன் பணிக்குழுத் தலைவருமான திரு கான் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் மருத்துவத் துறை சார்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு $4 பில்லியன் மதிப்பிலான மருத்துவப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. அது உள்நாட்டு ஏற்றுமதியில் ஏறக்குறைய 13 விழுக்காடு என்றார் அவர்.
சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பெரும்பாலான மருந்துப் பொருள்கள் முத்திரையிடப்பட்டவை அல்லது காப்புரிமை பெற்றவை. இருப்பினும், அத்தகைய வகைப்பாட்டுக்குள் வராத சில பொருள்களும் பாகங்களும் வரி விலக்குக்கு உட்படாது என்று திரு கான் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க வரியிலிருந்து விலக்குப் பெறுவதற்கான நிபந்தனைகளை அமெரிக்காவுடன் தெளிவுப்படுத்த சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளதாகவும் திரு கான் கூறினார்.
“அரசாங்க மட்டத்தில் அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே வரி குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும். அதேவேளை, ஒவ்வொரு நிறுவனத்தின் நிலவரமும் அவற்றின் முதலீட்டுத் திட்டத்தைப் பொறுத்து அமைந்தது,” என்று திரு கான் விளக்கம் அளித்தார்.
தற்போதைய தமது திட்டங்கள் வரி விலக்குக்குத் தகுதிபெறுமா என்பதை நிறுவனங்களும் அமெரிக்க அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் கான் அறிவுறுத்தினார்.
சூழலுக்கு ஏற்ப வர்த்தகத்தை மாற்றியமைப்பதற்கான மானியம் போன்ற திட்டங்கள் நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் என்றும் திரு கான் கூறினார்.

