ஆண்டுதோறும் மேலும் 5,000 பேர்க்குச் சிங்கப்பூர்க் குடியுரிமை, நிரந்தரவாசம்

ஆண்டுதோறும் மேலும் 5,000 பேர்க்குச் சிங்கப்பூர்க் குடியுரிமை, நிரந்தரவாசம்

2 mins read
2314f179-1a57-4336-aba5-e3ac80dca3cd
கூடுதலாக ஆண்டுக்கு 5,000 பேர்க்குக் குடியுரிமை வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. - கோப்புப் படம்: எஸ்பிஎச் மீடியா

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக 5,000 பேர்க்குக் குடியுரிமையும் நிரந்தரவாசத் தகுதியும் வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் திட்டமிடுகிறது என்று துணைப்பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

விரைவாக மூப்படைந்துவரும் சமூகம், சரிந்துவரும் மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவை அரசாங்கத்தின் முக்கிய அக்கறைகளாக உருவெடுத்துள்ளன.

அவற்றின் அடிப்படையில் சமூகத்தையும் பொருளியலையும்  துடிப்புடன் வைத்திருக்க நிலையான குடிமக்கள் விகிதம் அவசியம் என்று திரு கான் குறிப்பிட்டார். 

அவ்வகையில், நிலையான குடிமக்கள் விகிதத்தைக் காப்பது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்ட  அவர், காலப்போக்கில் அந்த எண்ணிக்கை மிதமான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

‘‘கடந்த ஆண்டு ஏறக்குறைய 25,000 பேருக்குக் குடியுரிமை வழங்கினோம். நாட்டின் மொத்தக் கருவள விகிதம், மக்கள்தொகை வளர்ச்சியில் நிலவும் போக்குகளைப் பொறுத்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் 30,000 பேருக்குக் குடியுரிமை வழங்கத் திட்டமிட்டு வருகிறோம்,’’ என்றார் திரு கான்.

சிங்கப்பூர் நிரந்தரவாசம் என்பது குடியுரிமையை நோக்கிய வழியாகத் திகழ்வதால் அந்த எண்ணிக்கையும் கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

‘‘கடந்த சில ஆண்டுகளாக, நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை 540,000 என்ற அளவில் நிலையாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் 40,000 பேருக்கு நிரந்தரவாசத் தகுதி வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 35,000ஐவிட அதிகம்,’’ என்றும் சொன்னார்.

‘‘குடியேற்றம் வாயிலாக யாரை இங்கே கொண்டுவருகிறோம் என்பதில் அரசு தொடர்ந்து கவனமாகச் செயல்படும்.

‘‘இந்த அம்சம் மிகுந்த கவனத்துடன் கையாளப்படும் வேளையில், அதற்கான ஒருங்கிணைப்பு முயற்சிகளும் தீவிரப்படுத்தப்படும்,’’ என்றும் திரு கான் கூறினார்.

மூப்படையும் மக்கள்தொகை குறித்தும் அதனைச் சார்ந்த குடியேற்றம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அவர் விவரித்தார்.

குடியேற்றம் ஏன் அவசியம் என்பதைச் சிங்கப்பூரர்கள் அறிந்துள்ளதாகச் சுட்டிய திரு கான், நாட்டில் நிலவும் இனச் சமநிலை தொடர்ந்து கட்டிக்காக்கப்படும் என்றும் சமூகத்தின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக, நாட்டு மக்கள்தொகையில் குடியேற்றம் ஏற்படுத்தும் தாக்கமும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்