மத்தியக் கிழக்கில் அதிகரிக்கும் பதற்றநிலை காஸாவில் சண்டைநிறுத்த உடன்படிக்கையை எட்டுவதற்கான முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளது குறித்து சிங்கப்பூர் மிகுந்த கவலை அடைந்திருப்பதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அனைத்துத் தரப்பும் அனைத்துலகச் சட்டத்திற்கு இணங்கி நடக்கவேண்டும் என்று சிங்கப்பூர் மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியக் கிழக்கில் தற்போது நிலவும் சண்டையின் தொடர்பில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், டாக்டர் பாலகிருஷ்ணன் அந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தையும், அங்குள்ள குடியிருப்புகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சட்டவிரோதமானது என்று ஜூலை 19ஆம் தேதி ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது ‘முக்கியம்’ என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்துலக நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்துகள் அனைத்துலகச் சட்ட முறையில் கணிசமான தாக்கத்தைக் கொண்டுள்ளன என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.
இஸ்ரேலியக் குடியிருப்புகள் குறித்து சிங்கப்பூரின் நீண்டகால நிலைப்பாடு தெளிவாகவும், மாற்றமின்றி இருந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
“அனைத்துலகச் சட்டத்தின்கீழ், சிங்கப்பூர் இஸ்ரேலியக் குடியிருப்புகளைச் சட்டவிரோதமானவையாகக் கருதுகிறது. இந்தக் குடியிருப்புகளால், இருநாட்டுத் தீர்வை எட்டுவதற்கு மேலும் சிரமமாக உள்ளது,” என்றார் அவர்.
இஸ்ரேலியக் குடியிருப்பு நடவடிக்கைகளை நிராகரிக்கும் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை தீர்மானங்களுக்கு சிங்கப்பூர் எப்போதுமே ஆதரவாக வாக்களித்திருப்பதை டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, ஜெருசலத்தின் நிலையை மாற்ற எடுக்கப்பட்ட அனைத்து ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளையும் இஸ்ரேல் ரத்துசெய்யவேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்நிலையில், அனைத்து இனங்கள், மொழிகள், சமயங்களையும் சேர்ந்த சிங்கப்பூரர்கள் இதுவரை காஸாவுக்கு $17 மில்லியனுக்கும் மேல் நிதி உதவி அளித்திருப்பதை டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

