தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் வரலாறு கூறும் ‘வாமனத் தீவு’ நூல் கலந்துரையாடல்

2 mins read
36c41903-2589-4b33-80b7-984ca99077d6
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், ‘வாமனத் தீவு’ நூல் பற்றிய கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் முன்னாள் தலைவர் நா.ஆண்டியப்பன் எழுதிய ‘வாமனத் தீவு’ (சிங்கப்பூரின் வரலாற்றுத் தொகுப்பு) நூலைப் பற்றிய ஒரு கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. அந்த நூல் கடந்த மாதம் வெளியீடு கண்டது.

தேசிய நூலகத்தின் 5ஆம் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணிவரை கலந்துரையாடல் இடம்பெறும்.

கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து தற்போதைய காலகட்டம் வரையிலான பல அரிய தகவல்கள் நூலில் உள்ளன.

குறிப்பாக, சோழப் பேரரசன் இராஜேந்திரனின் தென்கிழக்காசியப் படையெடுப்பு, சிங்கப்பூரை ஆண்ட மன்னர்கள், சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்சின் சிங்கப்பூர் வருகை, பிரிட்டிஷ் காலனித்துவத்தில் சிங்கப்பூர், ஜப்பானியப் படையெடுப்பு, சயாம் மரண ரயில்வேயில் தமிழர்கள் சந்தித்த இன்னல்கள், இந்திய தேசிய ராணுவம், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் வருகை, சிங்கப்பூரின் தன்னாட்சி, திரு லீ குவான் யூவின் தலைமையில் மக்கள் செயல் கட்சியின் தோற்றம், 1959 தேர்தலில் அதன் வெற்றி, தமிழவேள் கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும், தமிழ்மொழிக்கு அதிகாரத்துவத் தகுதி, மலாயாவுடன் சிங்கப்பூர் இணைவதற்கான போராட்டம், பின்னர் அதிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணங்கள், தனி நாடான சிங்கப்பூர் வளர்ச்சியடைய எதிர்நோக்கிய சவால்கள், மூன்றாம் உலக நாட்டின் நிலையிலிருந்து முதலாம் உலக நாட்டின் நிலைக்கு உயர்ந்த சாதனை உள்ளிட்ட பல தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

கலந்துரையாடலின்போது நூல் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும்.

பார்வையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நூலாசிரியர் நா.ஆண்டியப்பன் விளக்கமளிப்பார்.

நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். https://forms.gle/ewKj8mHnPLHYkcd88 என்ற இணைப்புவழி அக்டோபர் 9ஆம் தேதிக்குள் வருகையைப் பதிவுசெய்யலாம்.

மேல்விவரங்களுக்கு 9784 9105 எண்ணில் நூலாசிரியரைத் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்