சாபா நிலநடுக்கத்தின் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கினபாலு மலையேற்ற வழிகாட்டிகளைச் சிங்கப்பூர் அரசாங்கம் சிறப்பித்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சாபாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் பலரின் உயிரைக் காப்பாற்றிய முக்கியக் காரணமாக இருந்தனர் அந்த மலையேறி வழிகாட்டிகள்.
சாபா நிலநடுக்கத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி மாணவர்கள் உட்பட 18 பேர் மாண்டனர்.
தஞ்சோங் காத்தோங் பள்ளியைச் சேர்ந்தவர்கள் அந்த மாணவர்கள். மேலும் இரண்டு ஆசிரியர்களும் அப்போது மாண்டனர்.
மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வேணு கோபால மேனன் புதன்கிழமை (ஜூன் 23) குண்டாசாங்கில் உள்ள கினபாலு மலையேற்ற வழிகாட்டிகள் சங்கத்தினருக்குச் சிறப்பு விருந்து கொடுத்தார்.
மேலும் திரு வேணு கோபால் மலையேற உதவும் 30 காலணிகளை அச்சங்கத்திடம் வழங்கினார்.
“சாபா நிலநடுக்கம் சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட பலரைப் பாதித்தது. நிலநடுக்கத்தின் போது மலையில் சிக்கிக்கொண்ட மலையேறிகளைப் பத்திரமாகக் காப்பாற்றியது, மாண்டவர்களின் சடலங்களை மீட்பது உள்ளிட்ட பல உதவிகளை வழிகாட்டிகள் செய்தனர். அவர்களைச் சிறப்பிப்பதில் நானும் எனது சக ஊழியர்களும் பெருமைகொள்கிறோம்,” என்று திரு வேணு கோபால் கூறினார்.
அவர்களின் உதவியை என்றும் மறக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.