கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தம் கணவருக்குப் பக்கவாதம் ஏற்பட்ட பிறகு, 56 வயதான திருமதி இஸ்மியாத்தி யஹ்யா, நவம்பர் 7 அன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்வரை சுமார் ஏழு வாரங்கள் அவரது மருத்துவமனைப் படுக்கைக்கு அருகில் தூங்கினார். தனக்காக உணவு வாங்குவதற்காகவோ அல்லது அவரது படுக்கைப் பிரிவுக்கு அருகிலுள்ள ஒதுக்கப்பட்ட இடத்தில் குளிப்பதற்காகவோ மட்டுமே அவர் தம் கணவரைவிட்டு வெளியேறினார்.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை மற்றும் ஜூரோங் சமூக மருத்துவமனையின் இரண்டு ஆண்டு திட்டத்தின் மூலம் தமது கணவர் குணமடையும் வரை, திருமதி இஸ்மியாத்தி அவருக்குப் பக்கத்தில் இருந்தார்.
வீட்டிலேயே நீட்டிக்கப்பட்ட பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆதரவளிக்க ‘பார்ட்னர் டு கேர்’ (Partner To Care) திட்டம், பராமரிப்பாளர்களுக்கு உதவுகிறது. 2023 முதல் 4,000க்கும் மேற்பட்ட பராமரிப்பாளர்கள் இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றுள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள பல மருத்துவமனைகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியவர்களின் பராமரிப்பாளர்களை படுக்கைப் பிரிவுகளில் இரவு தங்க அனுமதித்து வருகின்றன. அவற்றில் அலெக்சாண்ட்ரா மருத்துவமனை, ஜூரோங் சமூக மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை ஆகியவை அடங்கும்.
இந்த மருத்துவமனைகள், ஈசூன் சமூக மருத்துவமனையுடன் சேர்ந்து, நோயாளியின் நிலை சீரானவுடன், படுக்கைப் பிரிவுகளில் நோயாளி பராமரிப்பில் பங்கேற்க பராமரிப்பாளர்களை அனுமதிக்கின்றன. இது நோயாளியின் பாதிக்கப்பட்ட நிலையை மேம்படுத்துவதாகவும், பராமரிப்பாளர்கள் மீது நம்பிக்கையை வளர்ப்பதாகவும் தாதியரும் மருத்துவர்களும் கூறுகின்றனர்.
டான் டோக் செங், மவுண்ட் எலிசபெத் ஆகியவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளில் சிக்கலான பராமரிப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு, குறிப்பாக மருத்துவமனையில் இரவு தங்கும் வசதி தேவைப்படுபவர்களுக்கு, ஒரு நியமிக்கப்பட்ட பராமரிப்பாளர் இருக்க நீண்டகாலமாக அனுமதித்து வருகின்றன.
இருப்பினும், பல மருத்துவமனைகளின் பாரம்பரிய அணுகுமுறை, மருத்துவமனைப் படுக்கைப் பிரிவுகளில் பார்வையாளர்கள் இருப்பதைக் கட்டுப்படுத்துவதாகும். பார்வையாளர்கள் நோயாளிகளின் பராமரிப்பைத் தடுக்கலாம் மற்றும் நோயாளிகளின் ஓய்வைப் பாதிக்கலாம் என்ற கவலைகள் அவற்றுக்கு இருந்தன.
கொவிட்-19 தொற்றுநோய்களின்போது பார்வையாளர் கட்டுப்பாடுகளின் எதிர்மறையான தாக்கத்தைக் கண்டதால், இப்போது அதிகமான மருத்துவமனைகள் பராமரிப்பாளர்களை இரவில் தங்கவும் அவர்களின் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இரவு தங்குதல்களுக்கு அப்பால், சில மருத்துவமனைகள் 2025ஆம் ஆண்டில் பார்வையாளர் வருகை நேரங்களையும் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்த அலெக்சாண்ட்ரா மருத்துவமனையின் பார்வையாளர் வருகை நேரம் இப்போது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றப்பட்டுள்ளது.
டான் டோக் செங் மருத்துவமனையின் பார்வையாளர் நேரம் நண்பகல் 12 மணிமுதல் இரவு 8 மணிவரை என்று உள்ளது. இதற்கு முன்பு அம்மருத்துவமனை பார்வையாளர்களை நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரையிலும், பின்னர் மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் மட்டுமே அனுமதித்தது.

