சிங்கப்பூர் குடும்பங்கள், 2023 நான்காம் காலாண்டிலிருந்து அதிக கடன் வாங்கி வந்துள்ளன.
சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறை திங்கட்கிழமை (மே 26) வெளியிட்ட தரவு, தொடர்ந்து ஆறாவது காலாண்டாக கடன் அதிகரித்து வந்ததைக் காட்டியது. 2025 முதல் காலாண்டில் கடன் அளவு, அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க, 5.2 விழுக்காடு அதிகரித்து $384.1 பில்லியனாகப் பதிவானது.
குடும்பங்களின் கடன்சுமை அதிகரிப்பு, இப்போதைக்கு சொத்துகளின் வளர்ச்சியை விஞ்சவில்லை. ஆக அண்மைய காலாண்டில், குடும்பங்களின் சொத்துகள் ஆண்டு அடிப்படையில் 7.8 விழுக்காடு அதிகரித்து $3.49 டிரில்லியனாகப் பதிவாகின.
குடும்பங்களின் சொத்துகள், கடன்களைவிட அதிகமாக உள்ள நிலையில், 2025 முதல் காலாண்டில் குடும்பங்களின் நிகர மதிப்பு ஆண்டு அடிப்படையில் 8.1 விழுக்காடு கூடி $3.1 டிரில்லியனாகப் பதிவானது.
அதற்கு முந்தைய காலாண்டின் 8.5 விழுக்காட்டு வளர்ச்சியைவிட இது சற்றுக் குறைவு. ஒரு குடும்பத்திடம் சொத்துகளைவிட கூடுதல் கடன் இருந்த நிலைமை கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டதில்லை.
மாறாக, ஒவ்வொரு காலாண்டிலும் குடும்பங்களின் நிகர மதிப்பு அதிகரித்து வந்துள்ளது. 2008 நான்காம் காலாண்டிலிருந்து 2009 இரண்டாம் காலாண்டு வரை மட்டுமே இதற்கு ஒரே விதிவிலக்கு. அப்போது சராசரி நிகர மதிப்பு தொடர்ந்து மூன்று காலாண்டுகளாகச் சரிந்தது.
புள்ளிவிவரத்துறை திங்கட்கிழமை வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், தனிப்பட்ட செலவிடக்கூடிய வருமானம் 2025 முதல் காலாண்டில், ஆண்டு அடிப்படையில் 5.2 விழுக்காடு கூடி $93.3 பில்லியனாகப் பதிவானது.