சாதனை அளவில் பங்கேற்பாளரை ஈர்த்த சிங்கப்பூர் ஹைரோக்ஸ் போட்டி

சாதனை அளவில் பங்கேற்பாளரை ஈர்த்த சிங்கப்பூர் ஹைரோக்ஸ் போட்டி

படம்: ஹைரோக்ஸ் சிங்கப்பூர்

29 Nov 2026 - 9:50 pm

2 mins read

சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடந்துமுடிந்த ஏஐஏ ஹைரோக்ஸ் உடலுறுதிப் போட்டியில் சாதனை அளவில் 55 வயதுக்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இம்மாதம் 26ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதிவரை நடத்தப்பட்ட ஹைரோக்ஸ் போட்டியில் பங்கேற்றோரில் 395க்கு மேற்பட்டோரின் வயது 55க்கும் அதிகம். ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஹைரோக்ஸ் போட்டியில் பங்கேற்றோர் எண்ணிக்கை 182.

மூவாண்டுக்குமுன் சிங்கப்பூரில் ஹைரோக்ஸ் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டபோது 55 வயதுக்கு மேற்பட்ட பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 37ஆக இருந்தது.

அந்த எண்ணிக்கை படிப்படியாகக் கூடி இப்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

நான்கு நாள்களில் ஏறக்குறைய 19,000 உடற்பயிற்சி ஆர்வலர்கள் ஹரோக்ஸ் போட்டியில் கலந்துகொண்டனர்.

மலேசியா போன்ற அண்டை நாடுகளிலிருந்தும் ஹைரோக்ஸ் போட்டியில் பங்கேற்க பலர் சிங்கப்பூர் வந்தனர்.
மலேசியா போன்ற அண்டை நாடுகளிலிருந்தும் ஹைரோக்ஸ் போட்டியில் பங்கேற்க பலர் சிங்கப்பூர் வந்தனர். - படம்: ஹைரோக்ஸ் சிங்கப்பூர்

ஹைரோக்ஸ் போட்டியில் பங்கேற்போர் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிய பிறகு குறிப்பிட்ட ஓர் உடற்பயிற்சியைச் செய்யவேண்டும். அதே போல எட்டு வெவ்வேறு உடற்பயிற்சிகளை அவர்கள் செய்வதுதான் போட்டி.

போட்டியில் பங்கேற்றவர்களில் ஒருவர் சிங்கப்பூர் ஏர்லைன்சின் முன்னாள் சிப்பந்தி நிர்வாகி ஜான் சுவா. 2003ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வெடுத்த திரு சுவாவிற்குத் தற்போது வயது 82.

ஃபின்லாந்து, சுவீடன், தென்கொரியா என பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்துள்ள திரு சுவா, அங்கெல்லாம் உடற்பயிற்சிமீதுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நவம்பர் 27ஆம் தேதி தமது மகள் ஜெரியுடன் உள்ளூரில் நடைபெற்ற ஹைரோக்ஸ் போட்டியை அவர் ஒரு கை பார்த்தார்.

“இது ஒரு நல்ல அனுபவம். வெவ்வேறு உடற்பயிற்சிகளைச் செய்து முடிக்க என் மகள் எனக்கு உதவினார். ஹைரோக்ஸ் போட்டி இவ்வளவு விறுவிறுப்பாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்றார் திரு சுவா.

பங்கேற்பாளர்களில் தாமே பெரும்பாலும் ஆக வயதுடையவராக இருந்திருக்கலாம் என்ற திரு சுவா, வெவ்வேறு உடற்பயிற்சி நிலையங்களில் பலரும் தமக்கு உற்சாகமளித்தது நெகிழ்ச்சியான தருணங்களாக அமைந்ததைப் பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்