சிங்கப்பூர் - இந்திய அமைச்சர்நிலைச் சந்திப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை

3 mins read
b0001b0f-e3ac-4f89-b38d-85f7bdd3dd56
அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பை அடுத்து இடம்பெற்ற இரவு விருந்தில் துணைப் பிரதமர் கான் கிம் யோங், சிங்கப்பூர் மற்றும் இந்திய அமைச்சர்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் - இந்திய அமைச்சர்நிலை வட்டமேசைக் கூட்டத்தில் இரு நாடுகளின் பலதுறை ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளதாக அதில் கலந்துகொண்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

2019ல் தொடங்கப்பட்ட இந்த வட்டமேசைக் கூட்டம், முதன்முதலில் 2022ல் புதுடெல்லியில் நடந்தது. அதன் பிறகு இக்கூட்டம், இரண்டாவது முறையாக சிங்கப்பூரில் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 26) ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

பசுமை, நீடித்த நிலைத்தன்மை சார்ந்த எரிசக்தித் திட்டம், மின்னிலக்க ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, சுகாதாரம், பகுதி மின்கடத்திகள் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிக்கும் மேம்பட்ட உற்பத்தித்துறை, இணைப்புத்தன்மை ஆகியவை திங்கட்கிழமை நடைபெற்ற வட்டமேசைக் கூட்டத்தின் முக்கியத் தூண்களாக விளங்கியதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.

இந்தச் சந்திப்பில் மேம்பட்ட உற்பத்தித்திறன், பகுதி மின்கடத்திகள், விமானத்துறை, கடல்துறை உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டன.

1. பகுதி மின்கடத்தித் துறையில் ஒத்துழைப்பு: இத்துறையில் இந்தியா, தனது திறன்களை மேம்படுத்த ஆசைப்படுகிறது. இத்துறையில் சிங்கப்பூர் உலக அளவில் வலுவாக இருப்பதால் இரு நாடுகளும் ஒத்துழைக்க ஆர்வம் காட்டுகின்றன.

இந்தியாவின் பகுதி மின்கடத்தித் துறை தற்போது தொடக்க நிலையில் உள்ளது. ‘வேதாந்தா-ஃபாக்ஸ்’, ‘டாடா எலெக்ட்ரானிக்ஸ்’, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் நிர்வாகத்திலுள்ள எஸ்சிஎல், ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ், சகஸ்ரா செமிகண்டக்டர்ஸ், விஷி செமிகண்டக்டர்ஸ் போன்ற நிறுவனங்கள், இந்தத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்க முற்படுகின்றன.

2. விமானத்துறை வளர்ச்சி: அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியா, விமானத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முற்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட விமானங்களை இந்தியா தருவித்துள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரியில் மட்டும் ஏர் இந்தியா 470க்கும் மேற்பட்ட போயிங், ஏர்பஸ் விமானங்களை வாங்கியது. விமானப் பராமரிப்பு, செயலாக்கம் போன்ற சேவைகளுக்கான கூடுதல் வாய்ப்புகளை இது காட்டுகிறது என்று விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

3. வலுவான நிதி இணைப்பு: பிப்ரவரி 2023ல் சிங்கப்பூரின் பேநவ் சேவைக்கும் இந்தியாவின் யுபிஐ சேவைக்கும் இடையிலான இணைப்பு 2023ல் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது.

நிதி நிறுவனங்கள் இரு நாடுகளுக்கும் இடையே நிதிப் பரிமாற்றத்தை உடனே மேற்கொள்ள இச்சேவை வகைசெய்கிறது. இந்தச் சேவை சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே மட்டும் இயக்கும் நிலையைக் கடந்து, தென்கிழக்காசிய வட்டார அளவில் விரிவுகாணலாம் என்று டாக்டர் விவியன் கூறினார்.

இதுதொடர்பான இணையப் பாதுகாப்பு அம்சங்களும் விதிமுறை அம்சங்களும் வட்டமேசைக் கூட்டத்தின்போது பேசப்பட்டதாக டாக்டர் விவியன் கூறினார்.

4. வர்த்தக வட்டமேசைக் கூட்டம்: அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்புடன் வர்த்தக வட்டமேசைக் கூட்டமும் நடைபெற்றது.

சிங்கப்பூர் தரப்பிலிருந்து பிளாக்ஸ்டோன் சிங்கப்பூர் (Blackstone Singapore), ஜிஐசி (GIC), ‘தெமாசெக்’, ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’, ‘டிபிஎஸ் வங்கி’, ‘செம்ப்கார்ப்’, ‘கேப்பிட்டாலேண்ட்’ ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியத் தரப்பிலிருந்து பாரதி என்டர்பிரைசஸ், மகிந்திரா குழுமம், டிவிஎஸ் மோட்டார்ஸ், இந்தியாவின் தேசிய முதலீட்டு நிதியம், புரோட்டியன் இகவ் டெக்னாலஜிஸ் ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்றனர்.

5. திறன் மேம்பாடு: இந்தியாவின் திறன் மேம்பாட்டுப் பயணத்திற்குச் சிங்கப்பூர் முனைப்புமிக்க ஆதரவாளராக உள்ளது. இந்தியாவில் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழக கல்விச் சேவைகளுக்கான நிலையம் (ITEES) அமைத்துள்ள ஐந்து திறன் கற்றல் நிலையங்கள் இந்த ஆதரவைப் புலப்படுத்துகிறது.

அத்துடன், சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகம், ஆசிய மேம்பாட்டு வங்கியுடன் இணைந்து ஒடிசாவின் உலகத் திறன்கள் நிலையத்தின் பட்டதாரிகளுக்கு சிங்கப்பூர் நிறுவனங்களில் வேலைப்பயிற்சியை வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்