சிங்கப்பூர்-இந்தியா உறவு நெறிசார்ந்தது: பிரதமர் வோங்

2 mins read
ddb42b81-7dec-4f61-8a6f-8195620f1cbb
சிங்கப்பூர்-இந்தியா இடையிலான ஆழ்ந்த நட்புறவை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஆரத் தழுவி தங்கள் அன்பைப் பரிமாறினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பங்காளித்துவமானது நெறிகள், ஒருவருக்கொருவர் மீதான நன்மதிப்பு, ஆழமான நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும் நிலைத்தன்மையற்ற, கொந்தளிப்புமிகுந்த உலகில் இந்தப் பங்காளித்துவம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

“பகிரப்பட்ட வரலாற்றாலும் மக்களுக்கு இடையிலான நட்புறவு, நம்பகத்தன்மை ஆகியவற்றாலும் வலுப்பெற்று, நமது மீள்திறனை வலுவாக்கி, புதிய வாய்ப்புகளைத் தன்வசப்படுத்தி, வட்டாரத்துக்கும் அதற்கு அப்பாலும் நிலைத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும்,” என்று பிரதமர் வோங் கூறினார்.

பிரதமர் பதவியை ஏற்றபின் இந்தியாவுக்கான முதல் அதிகாரத்துவப் பயணத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை (செப்டம்பர் 4) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிய பின்னர் இரு பிரதமர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இந்தியப் பிரதமர் மோடியும் தமது உரையின்போது அதே நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.

சிங்கப்பூருடனான உறவு அரசதந்திர உறவுகளுக்கு அப்பாற்பட்டது என்றும் பகிர்ந்த விழுமியங்களை அடிப்படையாகவும் அமைதி, முன்னேற்றம், செழுமை ஆகியவற்றை ஒருமித்த இலக்காகவும் கொண்டது என்றும் திரு மோடி புகழாரம் சூட்டினார்.

இந்தோ பசிபிக் வட்டாரத்திலும் தென்கிழக்காசிய வட்டாரத்திலும் அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதிசெய்யும் வண்ணம் இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு மோடி, பயங்கரவாதம் குறித்தும் பேசினார்.

“பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை, அது பொதுவான கவலையைத் தருகிறது. ஒன்றுசேர்ந்து செயல்பட்டு அதனை எதிர்கொள்ளவேண்டும்,” என்று அவர் சொன்னார்.

பஹல்காம் தாக்குதலுக்குப்பின் சிங்கப்பூரின் அக்கறைக்கும் ஆதரவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இருநாட்டுக்கிடையிலான மின்னிலக்கத் தொடர்பின் வெற்றிக்கு ‘யூபிஐ’, ‘பேநவ்’ நல்ல எடுத்துக்காட்டுகள் என்று திரு மோடி குறிப்பிட்டார். அவ்விரு கட்டணச் சேவைக் கட்டமைப்புகளில் மேலும் 13 வங்கிகள் இணைந்து இணைப்பை வலுப்படுத்தியுள்ளன.

ஏற்கெனவே உள்ள துறைகளைத் தாண்டி, புத்தாக்கத் துறைகளிலும் சிங்கப்பூர் - இந்தியா ஒத்துழைப்பு வலுவடைந்து வருவதைப் பட்டியலிட்டு இரு தலைவர்களும் பேசினர்.

செய்தியாளர்களைச் சந்தித்தபின் திரு வோங்கிற்குச் சிறப்பு விருந்தளித்தார் திரு மோடி.

டெல்லியில் அமைந்துள்ள இந்தியப் பிரதமரின் ‘ஹைதராபாத் ஹவுஸ்’ விருந்தினர் மாளிகையில் வியாழக்கிழமை நிகழ்வுகள் இடம்பெற்றன. இரு நாட்டு தேசியக் கொடிகளால் வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நுழைவாயிலுக்கு வெளியே பேரளவிலான பதாகைகள் இரு பிரதமர்களின் புகைப்படங்களுடன் அமைக்கப்பட்டிருந்தன.

காலையில் பிரதமர் வோங்கிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டு இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருநாட்டு உறவுகள் விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவமாக மேம்பாடு காணும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அதை நடைமுறைப்படுத்த அந்தச் சந்திப்பின்போது பேரிலக்குடன் திட்டம் தீட்டப்பட்டதாக இரு பிரதமர்களும் கூறினர்.

செயற்கை நுண்ணறிவு, குவான்டம் தொழில்நுட்பம், விண்வெளித் துறை போன்றவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன.

குறிப்புச் சொற்கள்