சிங்கப்பூர் ராணுவமும் இந்திய ராணுவமும் ‘குருஷேத்திரா போல்ட்’ ராணுவப் பயிற்சியில் 14வது முறையாக இணைந்துள்ளன.
இந்தப் பயிற்சி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை இந்தியாவிலுள்ள ஜோத்பூர் கேண்டன்மண்டில் நீடித்தது.
இந்திய ராணுவத்தின் உபசரிப்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், சிங்கப்பூர் தரப்பிலிருந்து சிங்கப்பூர்க் கவசவாகனப் படைப் பிரிவு, சிங்கப்பூரின் 42வது படைப்பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தியத் தரப்பிலிருந்து 340வது ( சுயேச்சை) இயந்திரமயமாக்கப்பட்ட பிரிவு, ஐ மெட்ராஸ் பிரிவு ஆகியவை அங்கம் வகித்தன.
இரு தரப்பினரும் பாவனைப் பயிற்சியிலும் நிபுணத்துவ முறையிலான பரிமாற்றங்களிலும் ஈடுபட்டனர்.
“கடுமையான வரைபட திட்டங்கள், பகிரப்பட்ட உத்திகள், நுட்பங்கள், செயல்முறைகள் ஆகியவற்றை எங்கள் துருப்பினர் கற்றுக்கொண்டனர்.
“அனுபவமிக்க, ஆக்கபூர்வமான முறையில் அந்தக் கற்றல் அமைந்திருந்தது,” என்று சிங்கப்பூரின் துணை தலைமை கவசவாகனப் படை அதிகாரி கர்னல் ஏண்டி குவெக் தெரிவித்தார்.
“இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் பகிர்ந்ததை நம் வீரர்கள் பாராட்டினர்,” என்றார் கர்னல் குவெக்.

