சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையின் 2026-2028 ஆம் பருவத்துக்கான புதிய தலைமைத்துவக் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெறவுள்ளது. வழக்கமாக ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் இச்சபையில், இம்முறை இருவேறு பலமிக்க அணிகள் முழுமையாகப் போட்டியிடுவதால் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய பொருளியல் சவால்கள், தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் சிங்கப்பூர்-இந்தியா இடையிலான வர்த்தக உறவுகள் வளர்ந்து வரும் வேளையில் நடைபெறும் இத்தேர்தலில் ‘டீம் ராஜ்’ மற்றும் ‘ஃபார்வர்ட் லீடர்ஷிப் அலையன்ஸ்’ ஆகிய இரு அணிகள் களம் காண்கின்றன.
சபையின் தற்போதைய துணைத் தலைவரும் ஜோதி ஹோல்டிங்ஸ் குழுமத்தின் உரிமையாளருமான திரு ராஜகுமார் சந்திரா ‘டீம் ராஜ்’ அணியை வழிநடத்துகிறார். சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நடைமுறை ரீதியான உதவிகளை வழங்குவதே தங்களது முக்கிய நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள வர்த்தகர்களுக்கான உதவி மையத்தை மீண்டும் திறப்பது, இந்தியா-ஆசியான் வர்த்தகப் பிரிவை உருவாக்குவது உள்ளிட்ட பல திட்டங்களை இவரது அணி முன்வைத்துள்ளது.
மறுபுறம், டிராக்நெட் ஸ்மார்டெக் நிறுவனத்தின் தலைவர் திரு டி. மோகன் தலைமையிலான ‘ஃபார்வர்ட் லீடர்ஷிப் அலையன்ஸ்’ அணி போட்டியிடுகிறது. சபையின் நிர்வாகச் சீர்திருத்தங்கள், முறையான தலைமைத்துவப் புதுப்பிப்பு மற்றும் நிறுவனங்களுக்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் புகுத்துவது ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த அணி பிரசாரம் செய்து வருகிறது.
சபை என்பது தனிநபர்களைச் சார்ந்து இருக்காமல், வலுவான நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று திரு மோகன் வலியுறுத்தியுள்ளார். இவருடைய அணியில் உள்ள யுஓபி வங்கியின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் திரு ரஜித் மோகன், இளைய தொழில்முனைவர்களைக் கவரும் வகையில் ‘டிஜிட்டல் கோர்’ என்ற தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளார்.
தேர்தல் போட்டி என்பது சபையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்லது என்றும் தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே அனைவரும் இணைந்து ஒரே சபையாகச் செயல்பட வேண்டும் என்றும் இருதரப்புத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 19) வெளியாகும் இந்தத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த இந்திய வர்த்தகச் சமூகத்தின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் என்பதால் இத்தேர்தல் வர்த்தக வட்டாரத்தின் கவனத்தைப் பேரளவில் ஈர்த்துள்ளது.

