‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்குச் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை உதவிக்கரம்

‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்குச் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை உதவிக்கரம்

படம்: சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை

14 Nov 2026 - 8:39 pm

2 mins read

தீபாவளிப் பண்டிகைக் காலகட்டத்தில் சிண்டா ஆண்டுதோறும் செயல்படுத்திவரும் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்குச் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையைச் சேர்ந்த அமைப்புகள் உதவி வழங்கியுள்ளன.

அத்திட்டத்திற்காகச் சமூக அமைப்புகளும் வணிக நிறுவனங்களும் பொதுமக்களிடமிருந்து நன்கொடை வசூலித்து வருகின்றன. அவ்வகையில் இவ்வாண்டும் அந்த நிதி திரட்டிற்கான முன்னெடுப்பை சிண்டா தொடங்கியுள்ளது. 

கடந்த 2022ஆம் ஆண்டுமுதல் தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக இந்திய முஸ்லிம் பேரவையின் இணையமைப்புகள், நன்கொடையாளர்கள் ஆகியோரின் ஆதரவுடன் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

கேம்பல் லேனில் உள்ள இந்திய மரபுடைமை நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிண்டா புரோஜெக்ட் கிவ் அரங்கில் நவம்பர் 6ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் இணை அமைப்பினர் பொருளுதவி வழங்கி, அறப்பணியில் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையோடு கைகோத்தனர். 

இந்த முன்னெடுப்பில் மொத்தம் உள்ள 20 அமைப்புகளில் 16 அமைப்புகள் பங்கேற்று ஆதரவளித்துள்ளன.

அஃப்லாக் ஸ்டார்ஸ் கல்வி, கலாசார அமைப்பு, கட்டிமேடு ஆதிரெங்கம் சங்கம், கொடிக்கால் பாளையம் சங்கம், கூத்தாநல்லூர் சங்கம், முஸ்லிம் லீக் சிங்கப்பூர், நாகப்பட்டினம் சங்கம், நாகூர் சங்கம், பொதக்குடி சங்கம், சலாம் அமைப்பு, சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம், தக்கலை முஸ்லிம் சங்கம், தோப்புத்துறை முஸ்லிம் சங்கம், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம், பரங்கிப்பேட்டை சங்கம், பூதமங்கலம் சங்கம் ஆகிய  அமைப்புகளுடன் ஆதரவாளர்களான அஜ்மல் குரூப், டி.எம்.ஒய். ஜுவல்லரி, பாவா டெலிகசி, கணக்காய்வாளர் அசன் மசூது உள்ளிட்டோரும் இணைந்தனர்.

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் முன்னாள் தலைவர் நிதி திரட்டிற்கான ஒருங்கிணைப்பாளர்கள் முஹம்மது பிலால், அமைப்பினரின் சார்பில் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

“அனைவரையும் ஒன்றிணைத்து நற்செயல்களில் ஈடுபடுத்துவதே இந்த சிண்டா நிதி திரட்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம்,” என்றார் திரு பிலால்.

குறிப்புச் சொற்கள்
தீபாவளிவணிகம்திட்டம்முஸ்லிம்