சிங்கப்பூர்- இந்தோனீசிய ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம்

சிங்கப்பூர்- இந்தோனீசிய ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம்

2 mins read
361bfe49-ba2d-45ba-997a-c3dd037936cb
சிங்கப்பூருக்கு வருகை தந்த இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் ஓய்வுத்தளச் சந்திப்பில் கலந்துகொண்டனர். - சிங்கப்பூரின் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்தில் இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுவாக்க அவற்றின் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏற்கெனவே உன்னத நிலையில் நீடிக்கும் வேளையில் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் அவற்றை வலுவானதாகத் தொடர உறுதிபூண்டுள்ளனர்.

ஒரு நாள் வருகையாக சிங்கப்பூர் வந்துள்ள அதிபர் பிரபோவோவும் திரு வோங்கும் திங்கட்கிழமை (ஜூன் 16) செய்தியாளர்களிடம் பேசினர்.

இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான மூன்று வரலாற்றுபூர்வ உடன்பாடுகள் வெற்றிகரமாக அமலாக்கப்பட்டது, இரு நாடுகளும் எந்த ஒரு சிக்கலான சூழலையையும் கடந்து வரும் ஆற்றல் பெற்றவை என்பதை நிரூபிப்பதாக திரு வோங் தெரிவித்தார்.

இரு நாடுகளும் ஒன்றை ஒன்று மதிப்பது மற்றும் ஒன்றின் மீது மற்றொன்று நம்பிக்கை கொள்வது ஆகியவற்றின் அடிப்படையில் சிக்கல்களைக் கடக்கும் ஆற்றல்கொண்டவை என்பதும் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இருதரப்பு ஒத்துழைப்பில் இடம்பெற்றுள்ள புதிய அம்சம் பசுமைப் பொருளியல் என்றும் திரு வோங் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நீடித்த நிலைத்தன்மைக்கான திட்டங்கள் மீது உடன்பாடுகள் கையெழுத்தாகும் சடங்கை இரு தலைவர்களும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து, ஓய்வுத்தள சந்திப்பில் பிரதமர் வோங்குடன் திரு பிரபோவோ கலந்துகொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்டச் சந்திப்பு இது. மேலும், இரு தலைவர்களும் புதிதாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட பின்னர் நடத்திய முதல் உயர்மட்டச் சந்திப்பு இதுவாகும்.

“நெருக்கம் அதிகமுள்ள இரண்டு நாடுகள் மட்டுமே பங்கேற்கக்கூடிய தளம்தான் ஓய்வுத்தளச் சந்திப்பு. உயர்மட்ட அளவில் இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று வைத்துள்ள நம்பிக்கை மற்றும் எளிய நட்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கக்கூடியது இச்சந்திப்பு.

“இருதரப்பு நம்பிக்கை என்ற உணர்வோடு இணைந்து பணியாற்றும் பகிர்வுக் கடப்பாடு இது,” என்று பிரதமர் வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.

மலேசியாவுடனும் சிங்கப்பூர் வருடாந்திர ஓய்வுத்தளச் சந்திப்பில் பங்கேற்று வருகிறது.

ஓய்வுத்தளச் சந்திப்பு உற்பத்தித்திறனுக்கு வழிவிடும் வெற்றிச் சந்திப்பு என்று திரு பிரபோவோ கூறினார்.

மேலும், பல்வேறு துறைகளில் 19 முடிவுகள் அந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

உத்திபூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்த அமைச்சர்களும் அதிகாரிகளும் தங்களது கடின உழைப்பை இனி தொடங்குவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்காப்பு, ஆகாயவெளி நிர்வாகம், சட்ட அமலாக்கம் போன்ற துறைகளில் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டமைப்பு உடன்பாடுகளின் அடிப்படையிலானது என்று பிரதமர் வோங் கருத்துத் தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுபூர்வ உடன்பாடுகள் 2022 ஜனவரியில் கையெழுத்தாயின.

அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அப்போதைய இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோர் பங்கேற்ற ஓய்வுத்தளச் சந்திப்பின்போது கையெழுத்துச் சடங்கு நடைபெற்றது.

பின்னர், அந்த உடன்பாடுகள் அனைத்தும் 2024ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தன.

குறிப்புச் சொற்கள்