புரிதல், நம்பிக்கை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆழமான, நாணயமான நட்பே மாறும் உலகில் இருக்கும் ஆக மதிப்புமிக்க சொத்து என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் திங்கட்கிழமை (ஜூன் 16) கூறினார்.
சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே அத்தகைய நட்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுக்காகத் தாம் ஏற்பாடு செய்த அதிகாரபூர்வ விருந்து நிகழ்ச்சியில் திரு தர்மன் அவ்வாறு சொன்னார்.
“கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் தங்களுக்கிடையிலான உறவில் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. நீண்டகாலமாக இருந்துவரும் இருதரப்பு விவகாரங்களின் தொடர்பில் ஒரு தரப்பு சொல்வதை மற்றொரு தரப்பு உன்னிப்பாகக் கவனித்து இருதரப்பும் பலனடையும் நோக்கில் முன்செல்ல வழிகளைக் கண்டுபிடித்துள்ளோம்,” என்றார் திரு தர்மன்.
“ஆசியான் கூட்டமைப்பை நிறுவிய உறுப்பு நாடுகளில் இரண்டு என்ற முறையில் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும், ஆசியானின் மற்ற பகுதிகள் முன்செல்ல பாதையை அமைத்துத் தரும்,” என்றும் திரு தர்மன் விவரித்தார். பசுமைப் பொருளியல், உற்பத்தி, மின்னிலக்கமயமாதல், கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பின் உச்சத்தையே தாண்டும் முயற்சிகளில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளதாக திரு தர்மன் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் சிங்கப்பூரில் வளர்ந்த திரு பிரபோவோ, இரு நாடுகளின் அக்கறைகளும் ஒன்று மற்றொன்றைச் சார்ந்தது என்று நம்புவதாகக் கூறினார்.
“இருதரப்புக்கும் நல்ல, கெட்ட காலங்கள் இருந்திருக்கின்றன. எங்களிடம் நம்பிக்கையற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எங்கள் பின்னணியில் வேறுபாடுகள் இருந்திருக்கின்றன,” என்று திரு பிரபோவோ சொன்னார். “தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் நம்மிடம் இருக்கவே செய்கின்றன. ஆனால், இன்றைய வட்டாரம்சார்ந்த உலக அரசியல் சூழலைப் பொறுத்தவரை ஒத்துழைப்பும் பங்காளித்துவமும்தான் அண்டை நாடுகளுக்குப் பயனளிக்கும்,” என்றும் அவர் விளக்கினார்.
சென்ற ஆண்டு நடப்புக்கு வந்த விரிவாக்கப்பட்டக் கட்டமைப்பு ஒப்பந்தங்கள் (Expanded Framework Agreements), பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத இருதரப்புப் பிரச்சினைகளை ஆராய்கின்றன; அவ்வகையில், அந்த ஒப்பந்தங்கள் ஒரு வரலாற்று நிகழ்வு என்றார் திரு தர்மன்.
அந்த ஒப்பந்தங்கள், தற்காப்பு, ஆகாயவெளி நிர்வாகம், நாடுகடத்தல் ஆகிய அம்சங்கள் சார்ந்தவை. அந்தக் காலகட்டத்தில் இந்தோனீசியத் தற்காப்பு அமைச்சராகப் பதவி வகித்த திரு பிரபோவோ, அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்-இந்தோனீசிய தலைவர்கள் விருந்தில் கலந்துகொள்ள திரு பிரபோவோ சிங்கப்பூர் வந்துள்ளார். அந்நிகழ்ச்சியை திரு பிரபோவோ, சிங்கப்பூர் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்குடன் நடத்துகிறார்.