போய்சி: சிங்கப்பூர் பரப்பளவில் 20 மடங்கு நிலத்தைக் கொண்டுள்ள பகுதியில் சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் எக்சர்சைஸ் ஃபோர்ஜிங் சேபர் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் இருக்கும் மவுண்டன் ஹோம் ஆகாயப்படைத் தளத்தில் நடந்துவரும் இப்பயிற்சி, பல்வேறு ராணுவப் பிரிவுகளை ஒன்றிணைத்து சம்பந்தப்பட்ட பகுதிகளை நன்கு அடையாளம் கண்டு சரியாகக் குறிவைத்துத் தாக்குதல் (integrated sense and strike) நடத்துவதற்கான சிங்கப்பூர் ஆயுதப்படையின் பயிற்சியாகும்.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்பயிற்சியில் 800க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். இம்மாதம் ஆறாம் தேதி தொடங்கிய 10வது ஃபோர்ஜிங் சேபர் பயிற்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) வரை தொடரும்.
ஆக அதிகமான ஆளில்லா வானூர்திகள்
2025ஆம் ஆண்டு ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகமாக 24 ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. 2023ஆம் ஆண்டுப் பயிற்சியில் 11 ஆளில்லா வானூர்திகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
அசென்ட் ஸ்பிரிட், ஸ்கைடியோ எக்ஸ்10, நிரோஸ் ஆர்ச்சர் போன்ற ஆளில்லா வானூர்திகள் ஃபோர்ஜிங் சேபரில் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்கைடியோ நிறுவனத்துடன் டிஎஸ்டிஏ எனப்படும் தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு பங்காளித்துவ ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
ஆளில்லா வானூர்திகளை நன்கு சோதிக்க அமெரிக்காவில் இருக்கும் அகண்ட நிலப்பகுதி பேருதவியாக இருப்பதாக தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பினர் உள்ளிட்டோர் பயிற்சியின்போது குறிப்பிட்டனர். அதோடு, அமெரிக்காவில் நிலையற்றிருக்கும் நிலப்பகுதிகள், கணிக்க முடியாத வானிலை ஆகியவை ராணுவப் பயிற்சிக்குத் தோதாக இருப்பதும் வலியுறுத்தப்பட்டது.
ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் பயன்படுத்தப்படும் நன்கு அடையாளம் கண்டு சரியாகக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதற்கான ஆயுதங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யா-உக்ரேன் போர், அண்மையில் சில நாள்களுக்கு நீடித்த இஸ்ரேல்-ஈரான் போர் ஆகியவற்றில் ஆளில்லா வானூர்திகள் முக்கியப் பங்காற்றிய நிலையில், அவை பாடங்களாக அமைந்ததெனக் குறிப்பிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஹெரோன் 1
அதிநவீன ஆளில்லா வானூர்திகள் அதிகம் பயன்படுத்தப்படும் வேளையிலும் பல ஆண்டுகளாக உபயோகத்தில் இருக்கும் பெரிய ஹெரோன் 1 ஆளில்லா வானூர்திகள் தொடர்ந்து முக்கியப் பங்கு வகித்துவருவதும் இவ்வாண்டு ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் வலியுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு வகை ஆளில்லா வானூர்தியும் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஹெரோன் 1 மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் சிலவற்றை சிறிய, புதிய வானூர்திகளால் செய்ய இயலாது. உதாரணமாக, சிறிய வானூர்திகளைக் காட்டிலும் ஹெரோன் 1 கூடுதல் நேரம் (24 மணிநேரத்துக்கும் மேல்) செயல்படக்கூடியது, நிலத்தில் கூடுதல் பகுதிகளைச் சோதனையிடக்கூடியது.
ஹெரோன் 1 வானூர்தியைப் பற்றி விவரித்த சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படைப் பொறியாளரான 23 வயது எம்இ1 மெய்கார்த்திக் சந்திர சேகரன், “சுருக்கமாகச் சொன்னால் சம்பந்தப்பட்ட இடத்தை அல்லது பொருளை அடையாளம் கண்டு குறிவைப்பது இதன் செயல்பாடு. வானில் இருக்கும்போது நிலத்தில் குறிவைக்கப்படும் இடங்களை ஹெரோன் 1 பார்த்து, அடையாளம் கண்டு செயல்பாட்டுப் பிரிவிடம் தெரியப்படுத்தப்படும். வானூர்தியின் கேமரா குறிவைக்கப்படும் இடத்தை அல்லது பொருளைப் படமெடுக்கும்,” எனக் குறிப்பிட்டார்.
ஆளில்லா வானூர்திகளைச் சோதித்துச் சரிபார்த்து இயக்கநிலையில் வைத்திருப்பது இவரது பொறுப்பாகும்.
ரெயிட் பிரிவு
இந்த ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் இன்னொரு முக்கிய அம்சம், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் மின்னிலக்கப் பிரிவான ரெயிட் பிரிவின் பங்கேற்பு. முதன்முறையாக இப்பிரிவு ஃபோர்ஜிங் சேபரில் ஈடுபட்டுள்ளது.
ரெயிட் பிரிவில் மென்பொருள் மேம்பாட்டாளராகப் பணியாற்றும் எம்இ5 ரிஸ்வான் ஜேக்கப், “கடந்த ஈராண்டுகளாக நாங்கள் செய்த பணிகளுடன் சேர்த்து ராணுவம் செயல்படும் சூழலுக்கு ஏற்றவாறு சிசிஐஎஸ் (தளபத் திய, கட்டுப்பாட்டுத் தகவல் முறை) முறையில் மாற்றங்களைச் செய்வோம்,” என்று தெரிவித்தார். ரெயிட் பிரிவின் ஈடுபாடு இருப்பதால் சிசிஐஎஸ் முறை எப்போதும் ஒரே நிலையில் இல்லாமல் சூழலுக்கேற்றவாறு மாற்றங்கள் செய்யப்படக்கூடிய ஒன்றாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
“ஏறத்தாழ இரு வாரங்கள் நீடிக்கும் ஃபோர்ஜிங் சேபர் பயற்சியில் தங்களிடம் வரும் வேண்டுகோள்களைப் பொறுத்தவரை சில மணிநேரங்களில்கூட மென்பொருள் மேம்பாடுகள் செய்துதரப்படலாம்,” என்று திரு ஜேக்கப் தெரிவித்தார்.
“ஒரு நாளில் பல வேண்டுகோள்கள் வரும்,” என்று கூறிய அவர் மேல்விவரங்களை வெளியிட இயலாது என்று சொன்னார்.
மேம்படுத்தப்பட்ட சிசிஐஎஸ் முறை
மேம்படுத்தப்பட்டுள்ள சிசிஐஎஸ், இப்போது கிராப் செயலியைப் போல் இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
எடுத்துக்காட்டாக, சிசிஐஎஸ் திரையில் காணப்படும் விமான உருவங்கள் ஆளில்லா வானூர்திகள் இருக்கும் இடங்களைக் காட்டும். அந்தந்த ஆளில்லா வானூர்தியின் நிலைப்பாட்டுக்கு ஏற்றவாறு சிசிஐஎஸ் முறையில் இடம்பெறும் ‘எல்காரிதம்’ கணக்குப் பரிந்துரைகளை முன்வைக்கும்.
அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள தளபதிகள் உத்தரவளிக்கலாம். இதன் மூலம் பல மணிநேரம் எடுத்த செயல்பாடுகள் இப்போது சில நிமிடங்களில் இடம்பெறுகின்றன.
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்
இவ்வாண்டு ஃபோர்ஜிங் சேபரில் பலரின் கவனத்தை ஈர்த்த அம்சங்களில் ஒன்று ஏஎச் 64-டி ரக அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள்.
இந்த ஹெலிகாப்டர்கள், பகல், இரவு வேளைகள் இரண்டிலும் பணியில் ஈடுபடக்கூடியவை. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், நகரும் அம்சங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதற்கானவை. இது, இவற்றுக்கும் போர் விமானங்களுக்கும் உள்ள வித்தியாசம்.
ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் பொருத்தப்படும் ஆயுதங்களில் சிங்கப்பூரில் கிடைக்காதவையும் அடங்கும்.
எஃப்-15எஸ்ஜி, மேம்படுத்தப்பட்டுள்ள எஃப்-16 போர் விமானங்களும் இந்த ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் இடம்பெறுகின்றன.
தற்காப்பு அமைச்சர் வருகை
தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தமது அமெரிக்கப் பயணத்தின் கடைசி அங்கமாக செப்டம்பர் 12ஆம் தேதி ஃபோர்ஜிங் சேபர் பயிற்சி நடக்கும் மவுன்டன் ஹோம் ஆகாயப்படைத் தளத்துக்கு வருகையளித்தார்.
“பல தரப்புகள் ஒன்றாக சூழலுக்கேற்ப செயல்படுவதைத்தான் நாம் ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் பார்க்கிறோம்,” என்றார் அமைச்சர் சான்.
“எடுத்துக்காட்டாக ஓரிரு முறைக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட ‘எல்காரிதம்’ கணக்கு எதிர்பார்த்த வேகத்தில் இயங்காததை நாம் உணரலாம். அதே ஓரிரு நாள்களில் அதைத் தேவைக்கேற்ப மாற்றியமைக்கலாம்,” என்றும் அவர் எடுத்துச்சொன்னார்.
“அதனால் சூழலுக்கேற்ப மாற்றங்களைச் செய்ய அடுத்த பயிற்சி வரைக் காத்திருக்கத் தேவையில்லை,” என்று திரு சான் விவரித்தார். தற்காப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட அவர், மவுன்டன் ஹோம் ஆகாயப்படைத் தளத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஒட்டுமொத்தத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படை, தொழில்நுட்ப அம்சங்களுடன் நவீனமயமாவதை ஃபோர்ஜிங் சேபர் பயிற்சி எடுத்துக்காட்டுகிறது. பயிற்சியின் தளபத்திய நிலையத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதும் அதற்குச் சான்று.
ஐடஹோவில், சிங்கப்பூரில் காண முடியாத மிகுந்த பரப்பளவைக் கொண்ட பகுதி ராணுவப் பயிற்சி மேற்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கிறது என்பது பயிற்சியில் பங்கேற்றவர்களின் ஒருமித்த கருத்தாகும்.