சிங்கப்பூரின் தற்போதைய வருடாந்தர மின்சாரப் பயன்பாட்டைவிட, 60 மடங்குக்கும் அதிகமான ஆற்றலை உற்பத்தி செய்யும் சாத்தியம் இந்நாட்டு நிலத்தடி வெப்ப மூலங்களுக்கு இருப்பது முந்தைய ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் நிலத்தடி வெப்ப ஆற்றலைப் பெறுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் வேகம் பெற்றுள்ளன. மின்சார உற்பத்தி, குளிரூட்டும் வசதி, வெப்பமூட்டும் தேவைகளுக்காக ஆழமான நிலத்தடியிலிருந்து வெப்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான கூடுதல் சாத்தியக்கூறுகளை ஆராய சிங்கப்பூர் புதிய விரிவான ஆய்வை மேற்கொள்ளவுள்ளது என்று எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் டான் சீ லெங் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 26) தெரிவித்தார்.
சிங்கப்பூர் எரிசக்திச் சந்தை ஆணையம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்தரக் கருத்தரங்கான சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தின் தொடக்க நிகழ்வில் அமைச்சர் டான் உரையாற்றினார்.
“ஆய்வு முடிவுகள் எங்களை மகிழ்ச்சி கலந்த வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இந்த முயற்சி முழுமை பெற்றால், நிலத்தடி வெப்ப ஆற்றலின் மூலம் அடுத்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நமக்குத் தேவையான மின்னாற்றலை வழங்க முடியும்” என்று அமைச்சர் டான் குறிப்பிட்டார்.
ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழிற்துறையினர் ஆகியோர் பங்கேற்று எரிசக்தி விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுகின்றனர்.
சுர்பானா ஜூரோங், ஜிஎல்ஜே எரிசக்தி ஆலோசனைக் குழுமம் அமைத்துள்ள கூட்டமைப்பு, 15 மாதங்கள் நீடிக்கும் இந்த ஆய்வை 2026ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கும்.
பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்பச் சாத்தியங்கள், செலவின மதிப்பீடு ஆகியவற்றுடன், ஆழ்நிலை வெப்ப அமைப்புகளை நிறுவுவதற்கான சுற்றுச்சூழல் மற்றும் வர்த்தகச் சாத்தியக்கூறுகளும் இதில் ஆராயப்படும்.
கூடுதல் மதிப்பீட்டுக்காக நிலத்தைத் துளையிடுதல் போன்ற தீவிர வழிமுறைகளையும் இக்கூட்டமைப்பு பயன்படுத்தவுள்ளது. சிங்கப்பூரின் நிலத்தடி வெப்ப வளங்கள் பூமிக்கு அடியில் பல கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளதாகவும், நாட்டின் நெருக்கமான நகர்ப்புறச் சூழல் காரணமாக இங்கு அமைக்கப்படும் ஆலைகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படலாம் என்றும் அமைச்சர் சுட்டினார்.
மேலும், மின் உற்பத்தித் திறன் என்பது வெப்ப வளங்களை வெளிக்கொணர்வதற்கான செலவு, தொழில்நுட்ப வசதிகள், ஆழ்நிலைத் துரப்பணத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகம் ஆகியவற்றைப் பொறுத்தது என்றும் இதில் பாதுகாப்பிற்கே தலையாய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
