தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றம் சிறப்புறச் செயல்படும்: மூத்த அமைச்சர் லீ நம்பிக்கை

2 mins read
345e35de-693e-4d88-bb6f-8b9caf2badc5
மூத்த அமைச்சர் லீ சியன் லூங் (நடுவில்), தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் (வலம்), சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தின் தலைவர் பிலிப் ஜெயரத்னம் (இடக்கோடி) ஆகியோருடன் உரையாடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றம் (Singapore International Commercial Court: SICCI), சவால்மிக்க உலகில் காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொண்டு, உலகளவில் சிறப்புடன் செயல்படும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘உலக அரங்கில் சிங்கப்பூரின் மதிப்பையும் அது உயர்த்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில், நாடுகள் சச்சரவுகளைத் தீர்த்துக்கொள்ள தயாராக இல்லை.

“இத்தகைய சூழலில் அனைத்துலகச் சட்டம் இருந்தாலும் முழுமைபெற்றதாக இல்லை. ஆனாலும் அது மிகவும் முக்கியம். நாடுகள் இன்னமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.

“அனைத்துலக வர்த்தகம் இன்னமும் செயல்பட்டடாக வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்புகள் என்ன விதிகள் பொருந்தும் என்பதைப் பார்க்க வேண்டும். எல்லை தாண்டிய வர்த்தகப் பிரச்சினைகள் எழும்போது தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும்; நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் தொடர்பான சச்சரவுகள் தீர்க்கப்பட வேண்டும்.

“இத்தகைய நிலவரத்தை சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று திரு லீ வலியுறுத்தியுள்ளார்.

பார்க்ராயல் கலெக்‌ஷன் மரினா பேவில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்ற மாநாட்டில் அவர் பேசினார்.

இதில், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தின் நீதிபதி பிலிப் ஜெயரத்னம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

திரு லீ, எஸ்ஐசிசியின் பத்தாவது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

“இது, ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். எஸ்ஐசிசி சிறப்பாகச் செயல்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தை அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு சரியானதென்று அது நிரூபித்துள்ளது,” என்றார் அவர்.

சிங்கப்பூருக்கு சட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் அவர் பேசினார்.

“சிங்கப்பூரின் வலுவான சட்டம், ஒரு தேசமாக நாம் முன்னேறுவதற்கு அடித்தளமாக இருந்துள்ளது. நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும், நமது சமூகச் சூழலுக்கு ஏற்ற, நன்கு வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் மட்டும் போதாது. அவை திறம்படச் செயல்படுத்தப்பட வேண்டும்.

“அதற்கு நீதிபதிகளுடன் வலுவான நீதிமன்றக் கட்டமைப்பும் தேவைப்படுகிறது,” என்றார் திரு லீ.

உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் சட்ட அமலாக்கத்தில் உள்ள வேறுபாடுளையும் அவர் சுட்டிக்காட்டினார். உள்நாட்டுச் சட்டங்களைப் பொறுத்தவரை, இறுதியில் அந்நாடே சட்டத்தை நடைமுறைப்படுத்துபவராக இருக்கும்.

ஆனால், அனைத்துலக உறவுகளில் இறுதியாக அமல் செய்பவர் யாரும் இல்லை என்று திரு லீ சியன் லூங் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்