நாட்டில் இன, சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் இலக்குடன் இன நல்லிணக்கம் குறித்த புதிய மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
‘இன நல்லிணக்கப் பராமரிப்பு மசோதா’ என்று குறிப்பிடப்பட்ட அந்த மசோதாவை உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்பிற்காக தாக்கல் செய்தார்.
இன, சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றம்
இந்த மசோதாவின்படி இன, சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றம் நிறுவப்படும் என்று உள்துறை அமைச்சு கூறியது.
சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட சமய நல்லிணக்கத்திற்கான அதிபர் மன்றத்திற்கு மாற்றாக இன, சமய நல்லிணக்கத்திற்கான அதிபர் மன்றம் கொண்டுவரப்படுகிறது.
இந்தப் புதிய மன்றத்தின் பணி, சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றத்தின் பணிகளுக்கு ஒத்து இருக்கும் என்றும் கூடுதலாக, இன நல்லிணக்கம் சார்ந்த விவகாரங்களையும் கைக்கொள்ளும் வகையில் விரிவடையும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
இம்மன்றத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அதிபர் மன்றத்தின் ஆலோசனையுடன் அதிபரால் நியமிக்கப்படவுள்ள புதிய சபையில் அங்கம் வகிப்போரில் தலைவருடன் குறைந்தது 10 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அந்த எண்ணிக்கை 20க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அமைச்சு விவரித்தது.
கட்டுப்பாட்டு ஆணை
இன ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கட்டுப்பாட்டு ஆணையைப் பிறப்பிக்க உள்துறை அமைச்சருக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
மேலும், இன நல்லிணக்கத்தைப் பேணுவதற்கான அரசாங்க முயற்சிகளை ஒருங்கிணைக்க இனம் தொடர்பான குற்றம் சார்ந்த சட்டம் புதுப்பிக்கப்படும் எனவும் அமைச்சின் அறிக்கை சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
இன ரீதியான குற்றங்களுக்கான சமூக மறுசீரமைப்பு எனும் முக்கிய அம்சமும் மசோதாவில் இடம்பெறவுள்ளது.
இனவாதம் தொடர்பிலான சம்பவங்கள் பாதிக்கப்பட்டவரை மட்டுமல்லாமல், சிங்கப்பூரில் பல்வேறு இனங்களுக்கு இடையே நிலவும் உறவுகளையும் சிதைக்கின்றன என்பதைச் சுட்டிய அமைச்சு, குற்றவியல் வழக்குகளால் மட்டுமே சமூக உறவுகளை சீர்செய்ய முடியாது.
எனவே, இன நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிப்பவர்களின் செயல்களுக்கு தீர்வுகாண சமூக நிவாரண முயற்சியை இப்புதிய ஆணை வழங்குவதாகவும் சொன்னது.
வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்கள்
சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்திற்கு தீங்கிழைக்கும் வெளிநாட்டு தலையீடுகளைக் களையும் நோக்குடனும், இனக் குழுக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும் மசோதாவின்கீழ் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களும் களம் காணவுள்ளன.
இந்த அம்சங்கள் பெரும்பாலும் சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தில் உள்ளவைபோல இருந்தாலும், “முக்கிய வேறுபாடு என்னவென்றால் அறிமுகப்படுத்தப்படவுள்ள பாதுகாப்புக் கூறுகள் அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரியால் இனம் சார்ந்த நிறுவனங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டவைகளுக்கு மட்டுமே பொருந்தும்,” என்று மசோதா விவரித்தது.
வரையறுக்கப்படும் நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தகவல் அறிவிக்கப்படும் என்றும் நிறுவனங்கள் தங்களை அவ்வாறு நிர்ணயம் செய்யாமல் இருப்பதற்கான காரணங்களை கொண்டிருந்தால் அதனை சமர்பிப்பதற்கான அனுமதியும் வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
இவ்வாறு வகைப்படுத்தப்படும் நிறுவனங்கள், பெயர் அறியப்படாத நன்கொடைகள், வெளிநாட்டுத் தொடர்புகள்; அவர்களின் தலைமைத்துவ அமைப்பு உள்ளிட்ட விவரங்களை வெளியிடுதல் என வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.
இதனிடையே, இந்த மசோதா குறித்து தமிழ் முரசிடம் பேசிய சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன், “இனமும் சமயமும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆணிவேராக திகழ்கின்றன. பல்லின மக்களும் ஒன்றாக வாழும் இச்சூழலுக்கு எதிரான சிறு செயலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
“எனவே இச்சட்டம் நாட்டின் நல்லிணக்கத்தை வலுவாக காக்கவும் அதனைப் பராமரிக்கவும் தேவையானது,” என்று கருத்துரைத்தார்.
முன்மொழியப்பட்ட இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், அமைச்சின் முதற்கட்ட கணிப்பின்படி சிங்கப்பூரில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இனம் சார்ந்தவையாக வகைப்படுத்த அது வழிவகுக்கும்.