உலகின் ஆகப்பெரிய உட்புறச் செங்குத்துப் பண்ணை சிங்கப்பூரில் அதன் கதவுகளைப் புதன்கிழமை (ஜனவரி 7) திறந்துள்ளது.
ஜூரோங் வெஸ்ட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள கிரீன்ஃபைட்டோ (Greenphyto) பண்ணை $80 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாடி பண்ணையில் 23 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள அடுக்குகளில் கீரைகள் வளர்க்கப்படுகின்றன.
இரண்டு ஹெக்டர் பரப்பளவில் மண்ணின்றி நீரில் (hydroponic) கீரைகளை வளர்க்கும் பண்ணை முழுக்க முழுக்க தானியக்க முறையில் செயல்படுகிறது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் அதிநவீன உற்பத்தி இயந்திரங்களும் பண்ணையின் செயல்பாடுகளைப் பார்த்துக்கொள்கின்றன.
கிரீன்ஃபைட்டோ பண்ணையில் வளர்க்கப்படும் ‘காய்லான்’, ‘லெட்யுஸ்’ போன்ற கீரை வகைகள், ஃபேர்பிரைஸ், ஷெங் ஷியோங் என 95 உள்ளூர் பேரங்காடிகளில் கடந்த ஆண்டிலிருந்து ஹைட்ரோகிரீன்ஸ் (Hydrogreens) என்ற பெயரில் விற்கப்படுகின்றன.
கிரீன்ஃபைட்டோ பண்ணையில் ஜப்பானிய ‘சை சிம்’, ‘பேபி ஸ்பினெச்’, ‘அருகுலா’ ஆகியவையும் உற்பத்திசெய்யப்படுகின்றன.
முழுமையாகச் செயல்படும் பண்ணையில் ஓர் ஆண்டுக்கு 2,000 டன் கீரை வரை உற்பத்தி செய்யமுடியும். தற்போது 200 டன் கீரையைப் பண்ணை உற்பத்தி செய்கிறது.
தொடர்புடைய செய்திகள்
செங்குத்தான பண்ணைகள் உள்ளூரிலும் உலக அளவிலும் சரிவை எதிர்கொண்டுவரும் வேளையில், புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய கிரீன்ஃபைட்டோ பண்ணையை அதிபர் தர்மன் சண்முகரத்னம் அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர்ப் பண்ணைகள் பின்னடைவை எதிர்கொண்டதுடன் ஒருசில பண்ணைகள் நிரந்தரமாக மூடப்பட்டன.
அதிக அளவிலான முதலீடு, கொவிட்-19 காலத்திற்குப் பிறகு சிதைந்த விநியோகத் தொடர்கள் ஆகியவை அதிநவீன செங்குத்துப் பண்ணைகளின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தன.
2025ஆம் ஆண்டுக்குள் காய்கறித் தேவையில் 30 விழுக்காட்டை உள்ளூரில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கையும் சிங்கப்பூர் கைவிட நேர்ந்தது.
எனினும், கிரீன்ஃபைட்டோ பண்ணை அதிகரிக்கும் எரிசக்தி செலவினங்களையும் ஆராய்ச்சிகள், மேம்பாடுகள் மூலம் 30 விழுக்காடு குறைத்துள்ளது.

