ஆசிய, மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள முதலீட்டாளர்களுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரில் உள்ள முதலீட்டாளர்கள் கூடுதல் எச்சரிக்கையாக முதலீடு செய்வதாக செப்டம்பர் 26ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
முதலீடு தொடர்பாக மாற்றம் ஏதும் விரும்பாத சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் 42 விழுக்காட்டினர் என்றும் முதலீடு செய்வதில் மும்முரம் காட்டுவோர் 24 விழுக்காட்டினர் மட்டுமே என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு ஒப்புநோக்க, ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் ஆர்வமும் அதிக தன்னம்பிக்கையும் கொண்டிருந்தனர். அவர்களில் 30 விழுக்காட்டினர் முதலீடு செய்வதில் எச்சரிக்கை காத்தனர். முதலீடு செய்வதில் தீவிரம் காட்டியவர்கள் 34 விழுக்காட்டினர்.
முதலீட்டு வகைகள் என்று ஆராயும்போது சிங்கப்பூரில் உள்ளோர் பங்கு முதலீட்டையே அதிகம் விரும்புவதாக ‘அவலொக்’ எனும் சுவிட்சர்லாந்து நிதிச் சேவை வழங்கும் நிறுவனம் கண்டறிந்துள்ளது. ஆய்வறிக்கைக்கான தரவுகளைத் திரட்ட, நிறுவனம் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டது.
முதல் ஆய்வில் ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் 18 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய 3,012 முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். மற்றோர் ஆய்வில் 341 நிதி மேலாண்மை நிபுணர்கள் பங்கேற்றனர்.
பாதிக்கு மேற்பட்டோருக்கு 250,000 அமெரிக்க டாலர் (S$321,000) முதல் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை மதிப்பில் முதலீடு செய்யக்கூடிய சொத்துகள் இருப்பதை முதல் ஆய்வு சுட்டியது.
அதேவேளை 40 விழுக்காட்டினருக்கு ஒரு மில்லியன் முதல் 30 மில்லியன் வரையிலான அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடுகள் இருந்தன. 30 மில்லியனுக்கு அதிகமான அமெரிக்க டாலர் மதிப்புடைய முதலீடுகள், நான்கு விழுக்காட்டினருக்கு இருந்தன.
சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை வாரத்தில் குறைந்தது ஒரு முறை சரிபார்த்துக்கொள்வதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. இருப்பினும், மின்னிலக்கச் சொத்துகளில் முதலீடு செய்வதில் இன்னமும் அவர்களுக்குத் தயக்கம் உள்ளது. போதுமான தகவல்களை அறிந்திராதது, மின்னிலக்கப் பரிவர்த்தனைகளில் நம்பிக்கை இல்லாதது ஆகியவை முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.


