காஸா அமைதிக் குழுவில் இணையச் சிங்கப்பூருக்கு அழைப்பு

3 mins read
c1f03bf8-ac2a-49f4-97ba-cd5ebbd3d3eb
காஸாவில் அமைதியை நிலைநாட்டுவதிலும் அதன் அடுத்தகட்ட வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதிலும் அமைதிக் குழு கவனம் செலுத்தும். - படம்: நியூயார்க் டைம்ஸ்

காஸா அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்தை மேற்பார்வையிட டிரம்ப் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்ட அமெரிக்கா தலைமையிலான ‘அமைதிக் குழுவில்’ சேர சிங்கப்பூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“காஸா அமைதிக் குழுவில் இணையச் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் ஆலோசித்து வருகிறது,” என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) தெரிவித்தது.

சிங்கப்பூரை அழைத்ததுபோல கடந்த சில நாள்களாக வெள்ளை மாளிகை பல நாடுகளுக்கு அழைப்புக் கடிதங்களை அனுப்பி வருகிறது.

காஸா அமைதிக் குழு என்பது முதலில் காஸாவை கட்டியெழுப்பும் திட்டமாக மட்டும்தான் இருந்தது. ஆனால் இப்போது அந்தக் குழு உலகளாவிய மோதலைத் தீர்க்கும் அமைப்பாக உருமாறி வருகிறது.

அழைப்புக் கடிதத்துடன் உலகளாவிய மோதலைத் தீர்ப்பதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் என்ற கடிதமும் இருந்தது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தைப் போல் காஸா அமைதிக் குழுவை உருவாக்க நினைப்பதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி அமைதிக் குழுவின் பட்டியலில் ர‌ஷ்யா உள்ளது. ஆனால் சீனா அதில் இடம்பெறவில்லை. குழுவில் உள்ள நாடுகளின் முழுப்பட்டியல் இன்னும் சில நாள்களில் அதிகாரபூர்வமாக வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

அமைதிக் குழுவுக்குத் தலைவராக உள்ள திரு டிரம்ப், அதன் முதல் சந்திப்புக் கூட்டத்தை உலகப் பொருளியல் மாநாட்டில் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகப் பொருளியல் கருத்தரங்கு இவ்வாரம் டாவோசில் நடக்கிறது.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஸா அமைதிக் குழு குறித்து முதல்முறையாக அதிபர் டிரம்ப் தகவல் வெளியிட்டார்.

சிங்கப்பூர் இந்தக் குழுவில் இடம்பெறக் கோரவில்லை.

“நாங்கள் அமைதிக் குழுவில் இடம்பெறப் பிரசாரம் செய்யவில்லை,” என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அக்டோபர் 15, 2025 அன்று நாடாளுமன்றத்தில் சிங்கப்பூர் இடம் பெறக் கோருமா என்று கேட்டபோது கூறினார்.

“நாங்கள் சிங்கப்பூரர்கள். எங்கள் அணுகுமுறை எப்போதும் அதிகமாகச் செய்வது, குறைவாகச் சொல்வது, அமைதியாக உதவிக்கரமாகவும் ஆக்கபூர்வமாகவும் இருப்பது, அடிப்படையிலிருந்து செயல்படுவது,” என்று அவர் கூறினார்.

“அதனால்தான் நாங்கள் எந்த வாரியங்களிலும் அமரக் கேட்கவில்லை. ஆனால் பாலஸ்தீன அதிகார சபையுடனான எங்கள் நீண்டகால ஒத்துழைப்பை அதிகரிப்போம்,” என்று டாக்டர் பாலகிருஷ்ணன் மேலும் கூறியிருந்தார்.

இதற்கிடையே, காஸா அமைதிக் குழு 2027ஆம் ஆண்டு இறுதிவரை மட்டும்தான் செயல்படும் என்றும் அதில் இணைய நாடுகள் ஒவ்வொன்றும் 1.3 பில்லியன் வெள்ளி வழங்க வேண்டும் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அது அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்று கூறப்படுகிறது.

பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு சிற்றரசுகள், துருக்கி உள்ளிட்ட 60 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அழைக்கப்பட்ட ஆசிய நாடுகளில் ஜப்பான், தென் கொரியா, இந்தியா, இந்தோனீசியா, தாய்லாந்து ஆகியவை அடங்கும். அமெரிக்காவின் போட்டியாளரான சீனா, இதுவரை பட்டியலில் இடம்பெறவில்லை.

வியட்னாம், ஹங்கேரி, கஜஸ்தான், மொரோக்கோ, அர்ஜென்டினா ஆகியவை குழுவில் சேர தங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்தியுள்ளன. அதே நேரத்தில் பெரும்பாலான நாடுகள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிப்பதில் எச்சரிக்கையாக உள்ளன.

குறிப்புச் சொற்கள்