தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டைக் குறைக்க கடும் வழிகாட்டுதல்கள் வெளியீடு

2 mins read
8441c003-03a6-4b91-9821-f96649e0cbe1
தம் மகன் ஜேஸ்பர் டான், 6, ஐபேட் சாதனத்தைப் பயன்படுத்துவதைப் பார்க்கும் மைக்கல் டான், 41. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பதினெட்டு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள், தொலைக்காட்சியையோ மின்னிலக்கச் சாதனங்களையோ பார்க்க அனுமதிக்கக் கூடாது. குழந்தைகள் அவற்றைப் பார்க்காவிட்டாலும், வீட்டில் பின்னணியில் அவற்றை இயக்கவும் கூடாது.

மின்னிலக்கத் திரையைப் பார்ப்பதில் 12 வயது வரையிலான சிறுவர்களுக்குச் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள கடுமையான, தெளிவான வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக இவை அமைகின்றன.

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) தொடங்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், குழந்தைகளும் இளம் பருவத்தினரும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற ஊக்குவிக்கும் புதிய தேசிய சுகாதார உத்தியின் ஒரு பகுதியாகும்.

சிங்கப்பூரில் சிறுவர்கள் அதிக நேரம் மின்னிலக்கச் சாதனங்களைப் பயன்படுத்துவது, போதிய அளவு சமச்சீரான உணவை உட்கொள்ளாதது, போதுமான அளவு தூங்காதது, உடல் அசைவு போதாதது போன்ற காரணங்களால் சுகாதார அபாயங்களை எதிர்கொள்வதாகச் சுகாதார, கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

தெமாசெக் தொடக்கப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், திரைப் பயன்பாடு குறித்த முதல் வழிகாட்டுதல்கள் 2023 மார்ச்சில் வெளியிடப்பட்டாலும், அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வு, சிறுவர்களின் மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டிற்கும் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் வலுவான தொடர்பைக் காட்டியுள்ளதாகக் கூறினார்.

குழந்தைகளின் உடல் அசைவு, சமூகத் தொடர்புகள், உணர்வுபூர்வ நலனைப் பாதிப்பதால், சிறுவர்களின் மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டு பழக்கங்களை மாற்றியமைக்க இன்னும் தீர்க்கமான, பயனுள்ள நடவடிக்கைகள் தேவை என்று அமைச்சர் கூறினார்.

பள்ளி நேரத்துக்கு அப்பாற்பட்டு, மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகக் கட்டுப்படுத்துவது, ஏழு முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அந்த நேரத்தை இரு மடங்காக்குவது உள்ளிட்டவை மற்ற மாற்றங்களில் அடங்கும்.

தங்கள் பிள்ளைகள் கைப்பேசிகளைக் கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்தவோ சமூக ஊடகங்களைப் பயன்படுத்தவோ பெற்றோர் அனுமதிக்கக் கூடாது.

“பெற்றோர் எங்களுடன் இணைந்து செயல்பட்டால், இந்த நடவடிக்கைகள், சட்டப்படி கட்டாயமல்ல என்றாலும், காலப்போக்கில் சிறுவர்களின் பழக்கங்களை வடிவமைக்க உதவும் என நான் நம்புகிறேன்,” என்றார் திரு ஓங்.

செய்தியாளர் கூட்டத்தில் திரு ஓங்குடன் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சுவெலிங், கல்வி துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் இருவரும் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்