சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏற்றம் கண்டது.
ஆண்டு அடிப்படையில் எண்ணெய் சாரா ஏற்றுமதி 10.7 விழுக்காடு உயர்ந்தது.
முக்கிய ஏற்றுமதி 15 விழுக்காடு அதிகரிக்கும் என ராய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில் முன்னுரைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முக்கிய ஏற்றுமதி ஏற்றம் கண்டதற்கு மின்னணுவியல் ஏற்றுமதி அதிகரிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு செப்டம்பர் 17ஆம் தேதியன்று தெரிவித்தது.
மின்னணுவியல் சாரா ஏற்றுமதியும் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டு அடிப்படையில் மின்னணுவியல் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதம் 35.1 விழுக்காடு உயர்ந்தது.
ஜூலை மாதத்தில் பதிவான 16.8 விழுக்காடு அதிகரிப்பைவிட இது அதிகம்.
ஒருங்கிணைந்த மின்சுற்றுகள், மின்வட்டு ஊடகச் சாதனங்கள், கணினி ஆகியவை எண்ணெய் சாரா ஏற்றுமதி அதிகரிப்புக்கு அதிகம் பங்களித்தன.
தொடர்புடைய செய்திகள்
ஒருங்கிணைந்த மின்சுற்றுகளுக்கான ஏற்றுமதி 52 விழுக்காடு அதிகரித்தது.
மின்வட்டு ஊடகச் சாதனங்களுக்கான ஏற்றமதி 166.8 விழுக்காடு உயர்ந்தது.
கணினிகளுக்கான ஏற்றுமதி 36 விழுக்காடு ஏற்றம் கண்டது.
சிங்கப்பூரின் மின்னணுவியல் ஏற்றுமதியில் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளின் பங்கு ஏறத்தாழ 50 விழுக்காடு.
இதற்கிடையே, மின்னணுவியல் சாரா ஏற்றுமதி ஆகஸ்ட் மாதம் 3.7 விழுக்காடு உயர்ந்தது.
ஜூலை மாதத்தில் அது 15.5 விழுக்காடு ஏற்றம் கண்டிருந்தது.
மின்னணுவியல் சாரா ஏற்றுமதியின் அதிகரிப்புக்குச் சிறப்பு இயந்திரங்கள், தங்கக் கட்டிகள், உணவுப் தயாரிப்புக்கான பொருட்கள் ஆகியவை அதிகளவில் பங்களித்தன.
மாத அடிப்படையில் சிங்கப்பூரின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதம் 4.7 விழுக்காடு சரிந்தது.
அதற்கு முன்பு அது ஜூலை மாதத்தில் 12.2 விழுக்காடு அதிகரித்திருந்தது.
எண்ணெய் சாரா ஏற்றுமதியின் அளவு $14.7 பில்லியனை எட்டியது.
ஜூலை மாதத்தில் இத்தொகை $15.4 பில்லியனாகப் பதிவானது.
சிங்கப்பூர் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் அளவு ஆகஸ்ட் மாதம் அதிகரித்தது.
பட்டியலின் முதல் இடத்தில் ஹாங்காங் உள்ளது.
இரண்டாவது இடத்தில் சீனாவும் மூன்றாவது இடத்தில் மலேசியாவும் உள்ளன.
ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட எண்ணெய் சாரா ஏற்றுமதி 70.6 விழுக்காடு ஏற்றம் கண்டது.
ஜூலை மாதத்தில் அது 3.3 விழுக்காடு குறைந்தது.

