சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 15.7% அதிகரிப்பு

2 mins read
8214de85-f12e-41c8-acdf-3d8bad95870a
முக்கிய ஏற்றுமதி 1.2 விழுக்காடு அதிகரிக்கும் என்று புளூம்பர்க் ஆய்வில் பங்கெடுத்த பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி இவ்வாண்டு ஜூலை மாதத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமாகப் பதிவானது.

ஆண்டு அடிப்படையில், எண்ணெய் சாரா ஏற்றுமதி 15.7 விழுக்காடு ஏற்றம் கண்டது.

முக்கிய ஏற்றுமதி 1.2 விழுக்காடு அதிகரிக்கும் என்று புளூம்பர்க் ஆய்வில் பங்கெடுத்த பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருந்தனர்.

ஆனால் அதைவிட பேரளவில் அது உயர்ந்துள்ளது.

இருப்பினும், புவிசார் அரசியல் பூசல்கள், சீனாவின் நிலையற்ற பொருளியல் நிலை, அமெரிக்கப் பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் சாத்தியம் ஆகியவற்றால் சிங்கப்பூரின் ஏற்றுமதி மீட்சி தொடர்ந்து ஆட்டம் காண்பதாக பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

துறைமுகப் பணிகள் இடையூறு, கணினிச் சில்லுகளுக்கான தேவை பலவீனமாக இருத்தல் ஆகியவற்றின் காரணமாக மின்னணுவியல் பொருள்களின் ஏற்றுமதி படிப்படியாகத்தான் மீண்டு வரும் என்று பெரும்பாலான பொருளியல் நிபுணர்கள் எதிர்பார்த்ததாக மேபேங்க் வங்கியைச் சேர்ந்த பொருளியல் நிபுணர் பிரையன் லீ கூறினார்.

தங்கக் கட்டிகள் ஏற்றுமதி அதிகரித்ததால் ஜூலை மாதத்தில் எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றமதி அதிகளவில் ஏற்றம் கண்டதாக அவர் தெரிவித்தார்.

தங்கக் கட்டிகளுக்கான ஏற்றுமதியைச் சேர்க்காமல், எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 12 விழுக்காடு மட்டுமே உயர்ந்ததாக அவர் கூறினார்.

மாத அடிப்படையில், எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12.2 விழுக்காடு அதிகரித்து $15.4 பில்லியனாகப் பதிவானது.

ஜூன் மாதத்தில் அது 0.4 விழுக்காடு குறைந்திருந்தது.

ஜூலை மாதத்தில் மொத்த வர்த்தகம் 13.7 விழுக்காடு உயர்ந்தது.

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி இவ்வாண்டு 4 விழுக்காடு முதல் 5 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு முன்னுரைத்திருந்தது.

“வெளிப்புறச் சூழல்களைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். அதற்கேற்ப, எங்களது முன்னுரைப்பில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்,” என்று அவ்வமைப்பு கூறியிருந்தது.

குறிப்புச் சொற்கள்