போதைப்பொருளற்ற எதிர்காலத்திற்கு வழிகாட்டும் சிங்கப்பூர் அடையாளச் சின்னங்கள்

போதைப்பொருளற்ற எதிர்காலத்திற்கு வழிகாட்டும் சிங்கப்பூர் அடையாளச் சின்னங்கள்

2 mins read
506d54f4-1dc0-4c86-8d44-8cd0d618ec83
வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நடைபெற்ற ‘டிரக்ஃபிரீஎஸ்ஜி’ ஒளியூட்டின் ஒரு பகுதியாக, மெர்லயனும் மரினா பே வட்டாரத்தில் உள்ள கட்டடங்களும் பச்சை, வெந்நிறங்களில் ஒளியூட்டப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

போதைப்பொருளற்ற சிங்கப்பூருக்கான சமூகத்தின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 26) இரவு நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கட்டடங்களும் கட்டமைப்புகளும் பச்சை, வெந்நிற விளக்குகளால் ஒளியூட்டப்பட்டன.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ‘டிரக்ஃபிரீஎஸ்ஜி’ ஒளியூட்டு எனும் அந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தது.

அதில் முதன்முறையாகப் பங்கேற்ற 11 பங்காளிகள் உட்பட மொத்தம் 49 பங்காளிகள் தங்கள் வளாகங்களைப் பச்சை அல்லது வெந்நிற விளக்குகளால் ஒளிரச் செய்தனர்.

அந்த வண்ணங்கள் ஆரோக்கியம், வலிமை, துடிப்பு ஆகியவற்றைக் குறிக்கும் போதைப்பொருள் எதிர்ப்பு நாடாவின் வண்ணங்களாகும். தற்போது, ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் அந்த வருடாந்தர நிகழ்வு, போதைப்பொருள் பயன்பாட்டுக்கும் சட்டவிரோதக் கடத்தலுக்கும் எதிரான அனைத்துலகத் தினத்தை முன்னிட்டு நடத்தப்படுகிறது.

இவ்வாண்டின் ஒளியூட்டு நிகழ்வு, போதைப்பொருள்களால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் ஆசியான் தினத்தைக் குறிக்கும் வகையிலும் அமைந்தது.

அது போதைப்பொருள்களின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் போதைப்பொருள் தீங்குகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுடன் துணையாக நிற்பதற்குமான இவ்வட்டாரத்தின் கூட்டுக் கடப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

போதைப்பொருள்களால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் ஆசியான் தினத்திற்காக ஜூன் 26ஆம் தேதி சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம், போதைப்பொருள் சூழ்நிலையின் தீவிரத்தைக் கோடிகாட்டினார்.

போதைப்பொருள் பிரச்சினையை சிங்கப்பூர் முற்றிலும் சகித்துக்கொள்ளாது என்பதையும் அவர் உறுதிசெய்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“போதைப்பொருள்களால் பாதிக்கப்பட்டவர்களை நாம் நினைவில் கொள்ளவேண்டும். போதைப்பொருள் புழக்கத்தால் தங்கள் வாழ்க்கை, வாழ்வாதாரங்கள், குடும்ப உறுப்பினர்கள், அன்புக்குரியவர்களை இழந்து தவிப்பவர்களே உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்.

“போதைப்பொருளற்ற எதிர்காலத்திற்கு நமது சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையிலும், போதைப்பொருளற்ற எதிர்காலத்திற்கான நமது தொலைநோக்குப் பார்வையிலும் சிங்கப்பூர் ஆசியானுடன் உறுதியாக நிற்கிறது,” என்று அவர் கூறினார்.

2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையைக் குறிப்பிட்டுப் பேசிய உள்துறை அமைச்சருமான திரு சண்முகம், போதைப்பொருள் புழக்கத்தால், ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 600,000 மக்கள் அல்லது ஒரு நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழக்கின்றனர் என்று தெரிவித்தார்.

சென்ற ஆண்டு (2025), சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட இளம் மற்றும் புதிய போதைப்புழங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்தது; அவர்களில் மிக இளையவருக்கு 12 வயது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
மெர்லயன்ஒளியூட்டுபோதைப்பொருள்

தொடர்புடைய செய்திகள்