சிங்கப்பூர் - லத்தீன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் பிரேசில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்: அதிபர் லூலா

1 mins read
6cfe1437-b601-4c18-addc-43f7d9e6b504
கோலாலம்பூரில் அக்டோபர் 27ஆம் தேதி ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா. - படம்: இபிஏ

சிங்கப்பூருக்கும் தென்னமெரிக்க நாடுகள் நான்கிற்கும் இடையில் 2023ல் செய்துகொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் பிரேசில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா கூறியுள்ளார்.

அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகியவற்றுடன் சிங்கப்பூர் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்கீழ், ஏறத்தாழ 96 விழுக்காட்டுப் பொருள்களுக்கான இறக்குமதி வரிகள் 15 ஆண்டுகளில் படிப்படியாக அகற்றப்படும்.

ஏறக்குறைய 25 விழுக்காட்டுப் பொருள்களுக்கான வரி நீக்கம் உடனடியாக நடப்புக்கு வரும்.

சிங்கப்பூர் அந்த நான்கு நாடுகளுடன் செய்துகொண்ட முதல் ஒப்பந்தம் இது. அந்த நாடுகள், தென்கிழக்காசிய நாடு ஒன்றுடன் முதன்முறையாக இத்தகைய ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளன.

ஒப்பந்தத்தின் ஆங்கிலப் பிரதியில் 2023 டிசம்பரில் கையெழுத்திடப்பட்டது. அதனை போர்ச்சுகீசிய மொழியில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்றுவருவதாக 2024 மார்ச்சில் தெரிவிக்கப்பட்டது. மொழி மாற்றம் செய்யப்பட்ட பிறகே பிரேசில் நாடாளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும்.

பிரேசில், சிங்கப்பூர் நாடாளுமன்றங்கள் மற்ற மூன்று நாடுகளுக்குக் காத்திராமல் அந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்க இயலும்.

அதிபர் லூலா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு எழுத்து மூலம் அளித்த சிறப்பு நேர்காணலில், பிரேசில் எப்போதும் சிங்கப்பூருடன் புதிய ஒப்பந்தங்கள் குறித்துப் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் கடந்த பத்தாண்டுகளில் நான்கு மடங்குக்குமேல் அதிகரித்து 8.7 பில்லியன் அமெரிக்க டாலராகப் (S$11.3 பில்லியன்) பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்