நிதிச் சேவைகளுக்காக தேசிய அளவில் மூன்று செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) திட்டங்களைச் சிங்கப்பூர் முன்னெடுக்கிறது.
அமெரிக்காவின் புதிய சில்லு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் நிச்சயமற்றதன்மையை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் சிங்கப்பூர் இதில் உறுதியாக இருக்கிறது.
சிங்கப்பூர் நிதித்தொழில்நுட்ப விழாவில் புதன்கிழமை (நவம்பர் 18) உரையாற்றிய துணைப் பிரதமரும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவருமான திரு கான் கிம் யோங் இத்தகவலை வெளியிட்டார்.
2026 வரவுசெலவுத் திட்டத்தில் இத்திட்டங்கள் முதலில் அறிவிக்கப்பட்டன. அவை மூன்று முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்தும் என்றார் திரு கான்.
நிதிக் குற்றங்கள் நடப்பதைத் தடுக்கும் கட்டமைப்பை வலுப்படுத்துதல், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான நிதி வசதியை மேம்படுத்துதல், பாதுகாப்பான ‘ஏஐ’ முகவர் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துதல் ஆகியவையே அவை.
“நிதி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுத் துறை அமைப்புகளை ஒன்றிணைத்து, பொதுவான திறன்களை உருவாக்கி, எந்தவொரு தனி நிறுவனத்தாலும் சாதிக்க முடியாத அளவுக்கு அதிகப் பலன்களைப் பெறுவோம்,” என்று அவர் கூறினார்.
“உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப நம்பிக்கைக்குரிய தீர்வுகளை நாங்கள் சோதிப்போம்; வெற்றி பெறும் தீர்வுகளைப் பரவலான பயன்பாட்டிற்குக் கொண்டுசெல்வோம்,” என்றார் திரு கான்.
இத்திட்டங்களை வழிநடத்தப் பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் தேசியச் செயற்கை நுண்ணறிவு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து தாக்கத்தை மதிப்பிடுவதாகவும் அமெரிக்க அதிகாரிகளுடன் பேசிவருவதாகவும் திரு கான் கூறினார்.
அனைத்துலக நற்பெயரைக் காக்கச் சட்டங்களை மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
நிதி மோசடிகளைத் தடுத்தல்
சிங்கப்பூர், முக்கியச் சவால்களை எதிர்கொள்ள எவ்வாறு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்பதையும் துணைப் பிரதமர் விவரித்தார்.
முதலாவது நோக்கம், நிதி மோசடிகளைக் கண்டறிந்து முறியடிக்கும் சிங்கப்பூரின் திறனை வலுப்படுத்துவது.
மோசடிகளை முன்கூட்டியே கண்டறிய ஐந்து வங்கிகளின் பரிவர்த்தனைத் தரவுகள் பாதுகாப்பாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இது ‘மோசடி கண்டறிதல் கட்டமைப்பை’ உருவாக்க உதவும். இதன் வடிவமைப்பு ஆய்வைச் சிங்கப்பூர் நாணய ஆணையம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கும்.
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான வசதியை மேம்படுத்துதல்
இரண்டாவது நோக்கம், வணிகங்கள், குறிப்பாகச் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், மேலும் சிறந்த முறையில் நிதி வசதியைப் பெற உதவுவது.
அத்தகைய நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான தகுதியை மதிப்பிடச் செயற்கைத் தரவுகளைக் கொண்டு ‘ஏஐ’ தீர்வுகள் உருவாக்கப்படும். இதன்மூலம் கடன் செலவு குறையக்கூடும்.
பாதுகாப்பான ‘ஏஜென்டிக்’ பரிவர்த்தனைகளைச் செயற்படுத்துதல்
மூன்றாவது திட்டம், தனிமனிதர்கள் மற்றும் வணிகங்களின் சார்பாக ‘ஏஐ’ முகவர்கள் எவ்வாறு பாதுகாப்பாகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்பதை ஆராயும்.
‘ஃபியூச்சர் ஆஃப் ஃபைனான்ஸ் இன்ஸ்டிடியூட்’ எனும் நிதி நிறுவனம், இம்மூன்று திட்டங்களுக்கும் ஆதரவளிக்கும்.
