சிங்கப்பூரில் புதிய தொழில்முறைச் சேவை நிலையமொன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) தொடங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நிபுணத்துவச் சேவை நிலையம் என்று அது வழங்கப்படும்.
வணிகங்கள் ஆசியா முழுதும் விரிவடைய உதவுவது அதன் நோக்கம். உள்ளூர்ச் சூழல் குறித்த புரிதல், தொழில்முறை நிபுணத்துவம், வர்த்தகத் தொடர்புகள் முதலிய சேவைகளைப் புதிய நிலையம் வழங்கும்.
ஒரே கூரையின்கீழ் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒருங்கிணைத்து அது ஆதரவு நல்கும்.
சிங்கப்பூர் நிபுணத்துவச் சேவை நிலையம் என்று அது வழங்கப்படும். ஆசியாவில் நம்பத்தகுந்த நிபுணத்துவச் சேவை வழங்குநர்களுடன் வணிகங்களை இணைக்கும் நிலையங்களில் அதுவும் ஒன்று. சிங்கப்பூர் நிபுணத்துவக் கணக்காளர் கழகம் (ஐஎஸ்சிஏ) அந்தத் தகவலை வெளியிட்டது.
புதிய நிலையம் சிசல் ஸ்திரீட்டில் உள்ள இஸ்கா ஹவுஸ் கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ளது. வட்டாரக் கட்டமைப்பின் முதன்மை நடுவமாக அது சேவையாற்றும்.
ஷாங்காய், நான்ஜிங், ஹோ சி மின் ஆகிய நகரங்களில் உள்ள நிபுணத்துவச் சேவை நிலையங்களுடன் நிறுவனங்களை அது இணைக்கும்.
ஜகார்த்தா இந்த ஆண்டின் பிற்பகுதியில் கட்டமைப்பில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருங்காலத்தில் பேங்காக், ஜோகூர் பாரு, ஷென்சென் முதலிய நகரங்களிலும் பின்னர் மத்திய கிழக்கிலும் நிலையங்களைத் திறக்கத் திட்டமுள்ளது.
“கட்டமைப்பு இன்னும் ஆரம்பக்கட்டத்தில் இருந்தாலும் வணிகங்கள் ஏற்கெனவே இதன் பலன்களைக் கண்டு வருகின்றன. வணிகங்கள் புதிய சந்தைகளில் நுழைவதற்குத் தேவையான நேரத்தை நம்பகமான உள்ளூர்த் தொடர்புகள் குறைப்பதோடு, நிச்சயமற்ற தன்மையையும் குறைக்கின்றன,” என்று கழகம் குறிப்பிட்டது.
ஷாங்காய் நிபுணத்துவச் சேவை நிலையம் போன ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. ஹோ சி மின் நகரில் உள்ள நிலையம் சென்ற ஆண்டு செப்டம்பரிலும் நான்ஜிங் நிலையம் இவ்வாண்டு மார்ச்சிலும் செயல்படத் தொடங்கின.
சிங்கப்பூர் நிலையத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா உரையாற்றினார்.
அறிமுகம் கண்ட ஆறு மாதங்களுக்குள் நிலையம் 700க்கும் மேற்பட்டோருக்குச் சேவையாற்றியிருப்பதாக அவர் சொன்னார்.
நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களை அது ஈர்த்துள்ளதாகக் கூறினார் நிதி, தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி. சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் அனைத்துலக வணிகங்களுக்கும் இடையில் 65க்கும் மேற்பட்ட தொடர்புகளை நிலையம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்கா தலைவர் லீ பூன் டெக்கும் புதிய நிலையம் பற்றிக் கருத்துரைத்தார்.
“வெளிநாடுகளில் வணிகத்தை விரிவுபடுத்தும் நிறுவனங்கள், நம்பகமான ஆலோசகர்களைக் கண்டறிவதற்கும் உள்ளூர்க் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் பல மாதங்களைச் செலவிடுகின்றன. புதிய நிலையக் கட்டமைப்பு அதை மாற்றுகிறது,” என்றார் அவர்.

