சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசோப் இஷாக்கின் மனைவி மறைந்த புவான் நூர் ஆயிஷாவுக்கு இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் செவ்வாய்கிழமை (ஏப்ரல் 22) பா’அல்வி பள்ளிவாசலில் அஞ்சலி செலுத்தினர்.
மலேசியாவில் பிறந்த திரு யூசோப் இஷாக் சிங்கப்பூரின் முதல் அதிபராக, 1959ஆம் ஆண்டு பதவியேற்றபோது திருவாட்டி புவான் நூர் ஆயிஷா சிறு வயதிலேயே பொதுமக்கள் முன்னிலையில் வரத் தொடங்கினார் என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
“இளம் நாடாகப் பல இன்னல்களைக் கடந்துசென்றபோது அவர் நீண்டகாலத்துக்குப் பங்களித்தார்,” என்று பிரதமர் வோங் கூறினார்.
திருவாட்டி புவான் நூர் ஆயிஷா பல சமூக சேவைக்கும் பங்களித்ததாகக் கூறிய அவர், பல சிங்கப்பூரர்கள் அவரால் தொடப்பட்டதைப் பகிர்ந்துகொண்டார்.
ஒருசில பொது நிகழ்ச்சிகளில்தான் திருவாட்டி பூன் நூர் ஆயிஷாவைச் சந்தித்திருப்பதைச் சுட்டிய பிரதமர் வோங், “அவரது கணிவும் கண்ணியமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன,” என்றார்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங், தமது ஏழு வயதிலிருந்து திருவாட்டி புவான் நூர் ஆயிஷாவை அறிந்தவர். உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்ததை அறிந்திருந்ததாக மூத்த அமைச்சர் லீ குறிப்பிட்டார்.
கடந்த மாதம் மனைவி ஹோ சிங்குடன் திருவாட்டி புவான் நூர் ஆயிஷாவை மருத்துவமனையில் சென்று பார்த்தபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும் தங்களை அடையாளம் கண்டதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
“அவர் முழுமையான வாழ்க்கை வாழ்ந்து, சிங்கப்பூருக்குக் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்திருக்கிறார். குறிப்பாக, சிங்கப்பூர் சுதந்தரம் பெற்ற தொடக்கக் காலங்களில் அவர் பங்காற்றினார்,” என்றார் திரு லீ.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப்பும் அவரது கணவர் திரு முகமது அப்துல்லா அல்ஹப்ஷியும் மறைந்த திருவாட்டி புவான் நூர் ஆயிஷாவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
முதல் அதிபர் யூசோப் இஷாக் பதவியேற்றவுடன் திருவாட்டி புவான் நூர் ஆயிஷா எவ்வாறு இஸ்தானாவை மாற்றியமைத்தார் என்பதைத் திருவாட்டி ஹலிமா நினைவுகூர்ந்தார்.
“பிரிட்டிஷ்காரர்கள் விட்டுசென்ற மரபு வலுவாகத் தென்பட்டது. ஆனால் அவர் வந்து அதை ஆசியர்களின் இடமாக, உள்ளூருக்குப் பொருத்தமான இடமாக மாற்றினார். அது முக்கியம். மக்கள் அதை மறக்கவில்லை,” என்றார் திருவாட்டி ஹலிமா.
திருவாட்டி புவான் நூர் ஆயிஷா மிகவும் பரிவுமிக்க பெண்மணி என்று புகழாரம் சூட்டினார் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன்.
திருவாட்டி புவான் நூர் ஆயிஷாவின் மறைவு, சுதந்திரம் அடைந்ததை அடுத்து வந்த இன்னல்களைப் பிரதிபலித்த காலக்கட்டத்தின் முடிவு என்று திரு டியோ வருணித்தார்.
முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி சிங்கப்பூரர்கள் திருவாட்டி புவான் நூர் ஆயிஷாவை எப்போதும் மறக்கமாட்டார்கள் என்றார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், மனிதவள அமைச்சர் டான் சீ லெங், மனிதவளம், தற்காப்பு ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் போன்ற பலரும் திருவாட்டி புவான் நூர் ஆயிஷாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
திருவாட்டி புவான் நூர் ஆயிஷாவின் நல்லுடல் ஏப்ரல் 22ஆம் தேதி சடங்குபூர்வ பீரங்கி வாகனத்தில் ஏற்றப்பட்டு அல்-பால்வி பள்ளிவாசலிலிருந்து கிராஞ்சி அரசு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அரசாங்க மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.