தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய நகரங்களையும் சிங்கப்பூர் போல் உருவாக்க உழைக்கிறோம்: இந்திய விஞ்ஞானி பொன்ராஜ்

2 mins read
d53d6e64-eea3-4551-818b-a6274d469837
விஞ்ஞானியும் இந்திய முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் தனிச் செயலாளருமான முனைவர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி. - படம்: பே கார்த்திகேயன்

சிறந்த உள்கட்டமைப்பு, பசுமையான, தூய்மையான சூழல், சிறந்த பொதுச் சேவை ஆகியவற்றுடன் உலகிற்கே சிங்கப்பூர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று இந்திய விஞ்ஞானி பொன்ராஜ் வெள்ளைச்சாமி புகழாரம் சூட்டியிருக்கிறார்.

“இந்தியாவிலுள்ள ஒவ்வொரு நகரத்தையும் சிங்கப்பூர்போல மாற்ற வேண்டும் எனும் கனவுடன் நாங்கள் உழைத்து வருகிறோம்,” என்றார் இந்திய முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் தனிச் செயலாளராகப் பணியாற்றியவருமான முனைவர் பொன்ராஜ்.

சிங்கப்பூரில் இசையுடன் கூடிய அபாக்கஸ் திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்காக வந்திருந்த முனைவர் பொன்ராஜ், முன்னாள் அதிபர் கலாமுடனான பயணம், கல்வி, கொள்கை வகுப்பு, இளையர்கள், மாறிவரும் உலகம் போன்றவை குறித்துத் தமிழ் முரசுடனான நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்.

“ஒரு தலைவருக்குத் தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும்; அதனை நனவாக்கப் பேரார்வம் இருக்க வேண்டும்; ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை, முடிவெடுக்கும் திறன் இருக்க வேண்டும் என்பார் அதிபர் கலாம். அத்திறன்கள் கொண்ட சிறந்த தலைமைத்துவம் கிடைத்ததால் சிங்கப்பூர் சிறந்து விளங்குகிறது,” என்று விஞ்ஞானி பொன்ராஜ் புகழ்ந்தார்.

தொடர்ந்து, தாம் பல துறைகளில் பணியாற்றினாலும் கல்விதான் தம் மனத்திற்கு நெருக்கமான துறை என்று கூறிய அவர், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை அடுத்து, தானியக்கம் செய்யப்படக்கூடிய பணிகள் மறைந்துவிடும் என்றும் படைப்பாற்றல்மிக்க பணிகளே மிஞ்சும் என்றும் தெரிவித்தார்.

இளையர்கள் அடிப்படையை நன்கு கட்டமைத்துக்கொள்வதுடன் தொடர்ந்து திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

உலகம் இயங்கும் வேகத்திற்கு ஈடுகொடுக்க, நவீன சிந்தனை, கணிதம், அறிவியல் என ஆய்வுகள் மட்டுமன்றி, பண்பாட்டுக் கூறுகளைக் கட்டிக்காப்பதும் அவசியம் என்றார் முனைவர் பொன்ராஜ்.

“மண்ணில் விதைக்கும் விதை, மரமாகி பெருவளர்ச்சியடைகிறது. அதேபோல, பண்பாடு எனும் விதையை ஆழமாக ஊன்றி, அதன்மேல் அறிவார்ந்த சிந்தனை, நலமிக்க சமுதாயமாக வளர்ச்சியடைவது, சமூகத்தை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும்,” என்று அவர் கூறினார். ஒவ்வொரு செயலும் கூட்டுமுயற்சி என்ற அவர், பன்முகத்திறன் கொண்டோர் இணைந்து செயல்படுவது சமூக வளர்ச்சிக்கு வித்திடும் என்றும் சொன்னார்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் செயல்பட்டுவந்த முனைவர் பொன்ராஜ், தற்போது தனித்துச் செயல்படுவதாகச் சொன்னார்.

“அரசியல் இல்லாமல் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்பார் அதிபர் கலாம். முன்னோடிகள் பலரும் சிறந்த அரசியலை முன்னெடுத்து நம்மிடம் விட்டுச்சென்றுள்ளனர். அது ஒரு தொடரோட்டம். என்னைத் தொடர்ந்துவரும் இளையர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும் நோக்கில் பயணம் செய்துவருகிறேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்