காஸ்வே பாயின்ட் கடைத்தொகுதி புதுப்பிக்கப்படும்போது, அதில் அமையவிருக்கும் புதிய சமூக, வாசிப்பு மையத்தின் வழியே சிங்கப்பூர் இலக்கியங்கள், உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆகியவற்றை விரிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.
‘தி ஹோம்ஸ்பேஜ் @ காஸ்வே பாயின்ட்’ என்று அழைக்கப்படும் இந்தச் சமூக வாசிப்பு மையத்தில், பல்வேறு மொழிகளில் அமைந்த, முன்னதாகப் பயன்படுத்தப்பட்ட நூலகப் புத்தகங்களின் மிகப்பெரிய பொதுச் சேகரிப்புகளில் ஒன்றும் இடம்பெறும்.
வாசிப்பை ஊக்குவிப்பதோடு சுற்றுப்புறத் தூய்மையைப் பேணவும் நீடித்த நிலைத்தன்மையை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வணிக வளாகத்தின் உரிமையாளரான ‘ஃபிரேசர்ஸ் சென்டர்பாயின்ட் டிரஸ்ட்’ அமைப்பும் தேசிய நூலக வாரியமும் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 22) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இந்தச் சமூக வாசிப்பு மையத்திற்கு வருகை தருவோர், பயன்படுத்தப்பட்ட நூலகப் புத்தகங்களை இரவல் எடுக்க வேண்டிய அவசியமின்றி தாங்களாகவே பார்வையிட்டு, வீட்டிற்கு இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
இங்கு அமையவிருக்கும் சிங்கப்பூர் இலக்கியப் பிரிவில் கருப்பொருள் சார்ந்த கண்காட்சிகளும் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெறும். சிங்கப்பூரின் இலக்கியப் பாரம்பரியத்தை மக்கள் உணர்ந்து போற்றும் வகையில், தேசியக் கலை மன்றத்துடன் இணைந்து தேசிய நூலக வாரியம் இந்த இலக்கியப் பிரிவை வடிவமைத்து நிர்வகிக்கும்.
பொதுமக்களுக்கான இந்த மையத்தின் திட்டமிடல், வடிவமைப்பு, இலக்கியச் சேகரிப்புகள், சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பார்வையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இணைந்து செயல்படுவதற்காக ‘ஃபிரேசர்ஸ் சென்டர்பாயின்ட் டிரஸ்ட்’டும் தேசிய நூலக வாரியமும் இரு அமைப்புகளும் செவ்வாய்க்கிழமையன்று புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.
‘தி ஹோம்ஸ்பேஜ் @ காஸ்வே பாயின்ட்’ மையம், வணிக வளாகத்தின் ஆறாவது, ஏழாவது தளங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் 32,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் அமையும்.
