சிங்கப்பூர்-மலேசியா எரிசக்தித் துறை ஒத்துழைப்பு உடன்பாடு புதுப்பிப்பு

சிங்கப்பூர்-மலேசியா எரிசக்தித் துறை ஒத்துழைப்பு உடன்பாடு புதுப்பிப்பு

படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

26 Oct 2026 - 2:56 pm

2 mins read

சிங்கப்பூரும் மலேசியாவும் எரிசக்தித் துறையில் தங்களுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வுக் குறிப்பைப் புதுப்பித்துள்ளன.

சிங்கப்பூர் எரிசக்திச் சந்தை ஆணையமும் மலேசியாவின் எரிசக்தி ஆணையமும் 2020ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன. அதுமுதல் அவ்விரு ஒழுங்குமுறை அமைப்புகளும் வழக்கமான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் தொழில்நுட்பப் பரிமாற்றங்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

இரு ஒழுங்குமுறை ஆணையங்களும் தங்களது 25வது ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வேளையில், இந்த உடன்பாட்டுப் புதுப்பித்தல் இரு நாடுகளின் நீடித்த உறுதிப்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது என்று திங்கட்கிழமை (அக்டோபர் 26) வெளியிட்ட கூட்டறிக்கையில் அவை தெரிவித்தன.

நான்கு நாள்களுக்கு நடைபெறும் 19வது சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார நிகழ்ச்சிகளுக்கு இடையே இந்த உடன்பாட்டில் கையெழுத்திடப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட உடன்பாட்டின்படி இருதரப்புக்கிடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஒழுங்குமுறைப் பரிமாற்றங்கள், அறிவுப் பகிர்வு ஆகியவை மேலும் வலுப்படுத்தப்படும்.

மின்சாரம், குழாய் எரிவாயு அமைப்புகளின் திட்டமிடல், நம்பகத்தன்மை, மொத்த மற்றும் சில்லறை மின்சாரச் சந்தை விதிமுறைகள், எல்லை தாண்டிய மின்சார வர்த்தகத் திட்டங்களைச் செயல்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சான்றிதழ்கள், சூரியசக்தி, மின்கலன் எரிசக்திச் சேமிப்பு அமைப்புகள் ஆகியவற்றில் கூட்டுப்பணி விரிவுபடுத்தப்படும்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஜோகூரிலிருந்து 900 மெகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்ய செம்ப்கார்ப் யுட்டிலிட்டீஸ், மலேசியாவின் சவுதர்ன் சோலார் அலையன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குச் சிங்கப்பூர் நிபந்தனை ஒப்புதல் வழங்கியிருந்தது.

எல்லை தாண்டிய மின்சார வர்த்தகம் முதலீடுகளை ஆதரித்து, வட்டார மின்அமைப்பை முன்னெடுத்துச் செல்ல உதவும் எனச் சிங்கப்பூர் ஆணையத்தின் தலைமை நிர்வாகி புவா கோக் கியோங் கூறினார்.

எரிசக்தி அமைப்புகள் மிகவும் சிக்கலாகி வரும் வேளையில், ஒழுங்குமுறை அமைப்புகளின் அணுக்கமான ஒத்துழைப்பு பாதுகாப்பான மின்விநியோகத்திற்கும் நிலையான எரிசக்தி மாற்றத்திற்கும் இன்றியமையாதது என்று மலேசிய ஆணையத்தின் தலைமை நிர்வாகி சித்தி சபினா சாலே தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மலேசியாஎரிசக்திஒத்துழைப்புஉடன்பாடு