சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே சட்டவிரோதமாக வாடகை வாகனச் சேவைகள் வழங்கிய சுமார் 19 ஓட்டுநர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) பிடிபட்டனர்.
நில எல்லை ஒன்றில் நிலப் போக்குவரத்து ஆணைமும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலும் கரையோரப் பூந்தோட்டங்கள் மற்றும் சாங்கி விமான நிலையத்தில் நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கைகளிலும் அவர்கள் பிடிபட்டனர். இரு அமைப்புகளும் நில எல்லையில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டது இதுவே முதல்முறையாகும்.
சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
நில எல்லைகளில் எதில் முறியடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், நிலப் போக்குவரத்து ஆணையம் கேட்டிருக்கிறது. துவாஸ் சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்டதுபோல் சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் தெரிந்தது. அந்தக் காணொளியை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்த்தது.
இதுபோன்ற சட்டவிரோதச் சேவைகளுக்கு எதிராக நிலப் போக்குவரத்து ஆணையம் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவருவதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் புதன்கிழமை ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
சட்டவிரோத வாடகை வாகனச் சேவைகளை வழங்கும் ஓட்டுநர்களிடம் தகுந்த உரிமம் இல்லை என்பதும் அவை ஏற்றிச் செல்லும் பயணிகளுக்கான தகுந்த காப்புறுதித் திட்டங்கள் இல்லாததும் அதற்குக் காரணங்கள் என்று அவர் விவரித்தார்.
“இத்தகைய சேவைகளால் பயணிகளுக்கு அபாயம் ஏற்படுகிறது, சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது,” என்று திருவாட்டி சுன் சொன்னார்.
எல்லை தாண்டி வழங்கப்படும் டாக்சி சேவை முறையை மேம்படுத்த அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாக திருவாட்டி சுன் தெரிவித்தார். பயணிகளை இறக்கிவிடுவதற்குக் கூடுதல் இடங்களை ஒதுக்குவது, இத்திட்டத்தில் பங்கேற்குமாறு கூடுதல் டாக்சிகளை ஊக்குவிப்பது ஆகிய வழிகளின் மூலம் அம்முயற்சி மேற்கொள்ளப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பயணிகளின் மாறுபட்ட தேவைகளுக்கேற்ப பல்வேறு வகை வாகனங்களைத் திட்டத்தில் சேர்த்துக்கொள்வது, பயனர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய செயலி உபயோகத்தில் இருப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது முயற்சியில் அங்கம் வகிக்கும்.
தற்போது பயணிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய செயலி நடப்பில் இல்லை.