ஜோகூர் நீரிணை கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க சிங்கப்பூர்-மலேசியா கூட்டு முயற்சி

2 mins read
d97a3992-f1f2-480c-b20b-5123dd9ac5bd
சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை மலேசிய அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மட், சிங்கப்பூர் அமைச்சர் கிரேஸ் ஃபூ இருவரும் பகிர்ந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் ஜோகூர் நீரிணையின் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது. அதோடு மீன் வளர்ப்புப் பண்ணைகள், நில மீட்பு திட்டங்களால் குறுகிய நீரிணை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இத்தகைய மிரட்டல்களை எதிர்கொள்ளும் வகையில் சிங்கப்பூரும் மலேசியாவும் நவம்பர் 27ஆம் தேதி கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக அப்பகுதியின் சுற்றுச்சூழல் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் நீரிணையின் நீர் தரத்தை கண்காணிக்கவும் கூட்டு முயற்சிகளைத் தொடர ஒப்புக் கொண்டன.

நீரிணையில் ஊட்டச்சத்துகள் அதிகமுள்ளன. ஆனால் பிராணவாயு குறைவாக உள்ளது.

இம்மாதம் 19ஆம் தேதி, சிங்கப்பூர், அதன் சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மீன் வளர்ப்புத் துறையை மாற்றியமைக்கும் ஒரு விரிவான திட்டத்தை வெளியிட்டது.

புதிய திட்டத்தின்கீழ், பாசி போன்றவற்றைத் தடுக்க நீரில் கலக்கப்படும் நைட்ரேட் மற்றும் சல்பேட் ஆகியவற்றின் அளவைப் பொறுத்து பண்ணையின் சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பிடப்படுகிறது.

இரு நாடுகளும் ஜோகூர் நீரிணையோரம் மீன் பண்ணைகளை வைத்துள்ளன. இந்த நிலையில் மிதமிஞ்சிய உணவு அல்லது அதிகப்படியான ஊட்டச்சத்துகள் கடலில் கலக்கும் நிலைத் தன்மையற்ற விவசாய முறைகளால் நீரிணையின் நீரின் தரம் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படலாம்.

நவம்பர் 26, 27 தேதிகளில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ அழைப்பின் பேரில், மலேசியாவின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் திரு நிக் நஸ்மி நிக் அஹ்மட் சிங்கப்பூர் வந்திருந்தார்.

இரு நாடுகளின் சுற்றுப்புற அமைச்சுகளுக்கு இடையே சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்ளும் வருடாந்திர சந்திப்பின் ஒரு பகுதியாக அவரது பயணம் இடம்பெற்றது.

1979 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இத்தகைய வருடாந்திர கூட்டம் சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களில் இரு அமைச்சுகளுக்கு இடையே நெருக்கமான உறவுகளையும் ஒத்துழைப்பையும் எளிதாக்கியுள்ளது என்று இரு அமைச்சுகளும் கூட்டறிக்கையில் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்