தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்களின் சந்திப்பு ஒத்திவைப்பு

2 mins read
f5e8f9ee-03bc-4100-a8b7-1279e980b8ab
பிரதமர் லாரன்ஸ் வோங் தாம் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிசம்பம் 3ஆம் தேதி பதிவு ஒன்றில் தெரிவித்திருந்தார். - கோப்புப் படம்: லாரன்ஸ் வோங்/ ஸ்பேஸ்புக்

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ‘கொவிட்-19’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் மலேசிய, சிங்கப்பூர் தலைவர்களின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

11வது சிங்கப்பூர், மலேசிய தலைவர்களின் ஓய்வுதளச் சந்திப்பு மலேசிய தலைநகரான கோலாலம்ரில் டிசம்பர் 8, 9 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் டிசம்பர் 4 தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தமக்கு மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிமும் அவரது மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் அனுப்பிய செய்திக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அந்தச் செய்தியில் ‘சீக்கிரம் குணமடையுங்கள்’ என்று அன்வார் இப்ராகிமும் அவரது மனைவியும் குறிப்பிட்டு இருந்தனர்.

சிங்கப்பூரின் இஸ்தானாவுக்கு அனுப்புவதுபோல ஒரு பழக்கூடையின் படமும் அதில் இடம்பெற்று இருந்தது.

“எங்கள் வருடாந்திர ஓய்வுத்தளச் சந்திப்புக்காக நாங்கள் கோலாலம்பூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் எனக்கு கொவிட்-19 தொற்று இருந்ததால் அதை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டிருந்தார்.

“எங்கள் சந்திப்புக்கான தேதியை முடிவு செய்யவிருக்கிறோம். விரைவில் சந்திப்பை எதிர்நோக்குகிறோம்,” என்றார் திரு வோங்.

இதற்கிடையே மலேசிய செனட் சபையில் பேசிய திரு அன்வார், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்திடுவது டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் செவ்வாய்க்கிழமை இரவு சிங்கப்பூர் பிரதமர் தனக்கு கொவிட்-19 இருப்பதாகவும் ஒப்பந்தம் கையெழுத்திடுவதை ஜனவரிக்கு ஒத்திவைக்கலாம் என்றும் தன்னிடம் கூறியதாக சொன்னார்.

செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 3) தமக்கு முதல் முறையாக கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறித்து ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் வோங் தெரிவித்திருந்தார்.

தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் இருந்து வேலை செய்யப்போவதாகவும் அவர் அப்பதிவில் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்