சிங்கப்பூரும் மலேசியாவும், எல்லை தாண்டிய போக்குவரத்துச் சேவையை வழங்க உரிமம் உள்ள டாக்சிகளின் எண்ணிக்கையை 200லிருந்து 500க்குப் படிப்படியாக அதிகரிக்கவுள்ளன.
இது, சிங்கப்பூர், மலேசியா இரண்டிலும் இயங்கும் டாக்சி சேவைகளுக்குப் பொருந்தும்.
முதற்கட்டமாக இரு நாடுகளும் கூடுதலாக 100 டாக்சிகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளன. இதன்கீழ், பெரிய குழுக்களாகப் பயணம் மேற்கொள்வோர், வர்த்தகக் காரணங்களுக்காகப் பயணம் மேற்கொள்வோர் ஆகியோரின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய பெரிய, கூடுதல் உயர்தர வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று இரு நாட்டுப் போக்குவரத்து அமைச்சுகளும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) கூட்டறிக்கையில் தெரிவித்தன.
சட்டவிரோதமாக உள்நாட்டில் போக்குவரத்துச் சேவைகள் வழங்கப்படுவதைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவது, காப்புறுதி நிபந்தனைகள் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு சிங்கப்பூரும் மலேசியாவும் எல்லை தாண்டிய சேவையை வழங்கும் டாக்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக், சிங்கப்பூரின் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் இருவரின் சந்திப்புக்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பு வியாழக்கிழமை (டிசம்பர் 4) நடைபெற்றது.
எல்லை தாண்டிய போக்குவரத்துச் சேவையை வழங்கும் டாக்சிகள், ஒரு நாட்டிலிருந்து அழைத்துவரும் பயணிகளை இன்னொரு நாட்டில் எங்கு வேண்டுமானாலும் இறக்கிவிட சிங்கப்பூரும் மலேசியாவும் அனுமதி வழங்கியுள்ளன. பயணிகளுக்குக் கூடுதல் வசதியாக இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி டாக்சிகள் ஓரிடத்தில் பயணிகளை ஏற்றிக்கொள்ளவும் எல்லையைத் தாண்டிய பிறகு ஓரிடத்தில் அவர்களை இறக்கிவிடவும்தான் அனுமதி உள்ளது. சிங்கப்பூர் டாக்சிகளுக்கு ஜோகூர் பாருவில் உள்ள லார்க்கின் சென்ட்ரல் முனையமும் மலேசிய டாக்சிகளுக்கு சிங்கப்பூரில் உள்ள பான் சான் ஸ்திரீட் முனையமும் அவ்விரு இடங்களாகும்.
அதேவேளை, இன்னமும் ஓரிடத்தில்தான் டாக்சிகள், பயணிகளை ஏற்றிக்கொள்ள முடியும். எல்லையை தாண்டிய பிறகு டாக்சிகள் உள்ளூரில் சேவைகளை வழங்காமல் பார்த்துக்கொள்ள இந்த விதிமுறை நடப்பில் இருப்பதாக கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“சாலையில் டாக்சி எடுப்பவர்களையும் செயலிவழி பதிவுசெய்து எடுப்பவர்களையும் ஏற்றிச்செல்வதற்கான இடங்களைக் கட்டங்கட்டமாக அதிகரிப்போம்,” என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் எப்போது நடப்புக்கு வரும் என்பது அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

