ஆர்ச்சர்ட் சாலை அருகே நசிம் சாலையில் பரந்து விரிந்துள்ள ஆடம்பர பங்களா ஒன்று, சாதனை விலையாக $308 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அந்த வீட்டை விற்க முன்னெடுக்கப்பட்ட குறைந்தது இரு முயற்சிகள் கைகூடவில்லை.
அந்த உயர்தர பங்களாவின் மொத்த நிலப்பரப்பு 58,000 சதுர அடிக்கும் அதிகம். அது, பாதுகாக்கப்பட்ட பங்களாவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வீட்டின் முன்னால் உள்ள தோட்டம் ஒன்று, இரு நிலப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவற்றில் வீடு கட்டலாம்.
சிங்கப்பூர் சொத்துச் சந்தை முதலீட்டு நிறுவனமான ஹோங் ஃபோக் கார்ப்பரேஷனின் கூட்டுத் தலைமை நிர்வாகி சோங் பின் சுவானும் அவரின் மனைவியும் அந்த வீட்டின் உரிமையாளர்கள். ரியல்ஸ்டார் பிரிமியர் குரூப், அந்த வீட்டைச் சந்தைப்படுத்துகிறது.
பிஸ்னஸ் டைம்சைப் பொறுத்தவரையில், அந்த வீடு $308 மில்லியனுக்கு விற்கப்பட்டால் அது சாதனை விலையாகும். ஆனால், அவ்வளவு பெரிய தொகைக்கு அதை விற்பது எளிதன்று.


